மீன் வியாபாரி கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள்: கோர்ட் அதிரடி தீர்ப்பு: சிறந்த காவல் பணிபுரிந்த இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு
மீன் வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் அதிரடி உத்தரது பிறப்பித்துள்ளது. குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தந்த இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் உள்ளிட்ட போலீசாரை உயரதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.
22.09.2019 அன்று சென்னை எம்கேபி நகர் காவல் மாவட்ட எல்லையில் உள்ள எம்கேபி நகரில் மீன் கடை வைப்பதில் நடந்த முன்விரோதத்தில் மீன் வியாபாரி ஜெகன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக 2019ம் ஆண்டு எம்கேபி நகர் இன்ஸ்பெக்டராக இருந்த (தற்போது திருமுல்லைவாயல் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர், ஆவடி காவல் ஆணையரகம்) ஜார்ஜ் மில்லர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். ஜெகனை வெட்டிக் கொன்ற ரவுடிகள் பிரகாஷ் என்கிற கட்டைப் பிரகாஷ், அருண்குமார், பிரவீன் ராஜ் என்கிற கருப்பு அஜித், அஜித் என்கிற அஜி பிள்ளை, பாரதி மற்றும் மேகநாதன் என்கிற மேகா, நவீன்குமார் என்கிற வாழைப்பழ அப்பு ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கு விசாரணை சென்னை 16வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. கொலையாளிகள் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து 16வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆபிரகாம் லிங்கன் இன்று தீர்ப்பளித்தார். மொத்தம் 7 குற்றவாளிகளில் 3ஆவது குற்றவாளி மேகநாதன் என்கிற மேகா, நவீன்குமார் என்கிற வாழைப்பழ அப்பு ஆகிய இருவரும் இறந்து விட்டனர். மீதமுள்ள ஏ1 குற்றவாளியான பிரகாஷ் என்கிற கட்டைப் பிரகாஷ், அருண்குமார், பிரவீன் ராஜ் என்கிற கருப்பு அஜித், அஜித் என்கிற அஜி பிள்ளை, பாரதி ஆகிய 5 பேருக்கு ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் புலன் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உரிய சாட்சிகளை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறந்த புலனாய்வு மேற்கொண்ட இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் உள்ளிட்ட போலீசாரை உயர் போலீஸ் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினார்கள்.