சென்னை, மதுரவாயல் மற்றும் மாதவரம் பகுதிகளில் சிறப்பாக பணிபுரிந்த போலீசாரை சென்னை பெருநகர வடக்கு கூடுதல் காவல் ஆணையாளர் நரேந்திரன் நாயர் நேரில் அழைத்து பாராட்டினார்.
சென்னை, மதுரவாயல் காவல் நிலைய தலைமைக்காவலர் கண்ணன், முதல்நிலைக் காவலர் சதீஷ் குமார் ஆகிய இருவரும் 14.12.2024 அன்று அதிகாலை சுமார் 4 மணியளவில், மதுரவாயல் அடையாளம்பட்டு பகுதியில் ரோந்து பணியிலிருந்தனர். அப்போது, அங்கு உள்ள தரைப்பாலத்தில் மழைநீர் வெள்ளத்தில் கார் ஒன்று சிக்கியுள்ளதை கண்டு காவலர்கள் இருவரும் துணிச்சலாக வெள்ள நீரில் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காரின் பின்பக்க கண்ணாடியை உடைத்து, காரிலிருந்த முகப்பேரைச் சேர்ந்த சுனில் வர்கீஸ் (58) என்பவரை பத்திரமாக மீட்டு முதலுதவி அளித்து அவரது மகனுக்கு தகவல் தெரிவித்து பத்திரமாக அவருடன் அனுப்பிவைத்தனர். பின்னர் அருகிலிருந்த JCB உதவியுடன் காரை போலீசார் மீட்டுள்ளனர்.

மாதவரம் காவல் நிலைய ரோந்து வாகன சிறப்பு உதவி ஆய்வாளர் துக்கன் இன்று (16.12.2024) அதிகாலை 3 மணியளவில் மாதவரம், M.R. சாலையில் பணியிலிருந்தார். அப்போது, அங்கு உள்ள பெட்ரோல் பங்க் காவலாளி ஒருவர் 4 பேர் தன்னிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1.61 லட்சத்தை கொள்ளையடித்து சென்றதாக கூறினார். உடனே சிறப்பு உதவி ஆய்வாளர் மாதவரம் குற்றப்பிரிவு காவல் நிலைய இரண்டாம் நிலை காவலர் சதீஷ் என்பவருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

உடன் காவலர் சதீஷ் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று அங்கு சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்த்த போது, காவலாளி கூறியது போன்று கொள்ளை சம்பவம் ஏதும் நடைபெறவில்லை தெரியவந்துள்ளது. மேலும் காவலாளியிடம் போலீசார் தீவிர விசாரணை செய்தில் அவர் பணத்தை வீட்டின் அருகில் உள்ள தோட்டத்தில் உள்ள குப்பைக்குள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதன் பேரில் போலீசார் ரூ.1.61 லட்சத்தை மீட்டு பெட்ரோல் பங்க் உரிமையாளரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். பணம் கொள்ளை போனதாக நாடகமாடிய காவலாளியை போலீசார் எச்சரித்தனர்.
மேற்படி இரு வேறு சம்பவங்களில் சிறப்பாக பணிபுரிந்த மதுரவாயல் காவல் நிலைய தலைமைக்காவலர் கண்ணன், முதல் நிலைக்காவலர் சதீஷ்குமார், மாதவரம் காவல் நிலைய ரோந்து வாகன சிறப்பு உதவி ஆய்வாளர் துக்கன், மாதவரம் குற்றப்பிரிவு காவல் நிலைய இரண்டாம் நிலை காவலர் சதீஷ் ஆகியோரை சென்னை பெருநகர காவல் (வடக்கு) கூடுதல் ஆணையர் நரேந்திரன் நாயர் இன்று (16.12.2024) நேரில் அழைத்து வெகுவாகப் பாராட்டி வெகுமதி வழங்கினார்.