மும்பை போலீஸ் என கூறி ரூ. 3.64 லட்சம் ஆன்லைனில் ஆட்டை: கேரளாவைச் சேர்ந்த பலே கில்லாடிகள் இருவரை கைது செய்த சைபர்கிரைம்
மும்பை போலீஸ் என கூறி ரூ. 3.64 லட்சம் ஆட்டையைப் போட்ட கேரளாவைச் சேர்ந்த பலே கில்லாடிகள் இருவரை சென்னை கிழக்கு மண்டல சைபர்கிரைம் போலீசார் கைது செய்தனர்.

சென்னை, மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் கடந்த 06.04.2024 அன்று கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது, ‘என்னை செல்போனில் தொடர்பு கொண்ட ஒரு நபர் தான் மும்பை கிளையிலுள்ள Fedex கொரியர் நிறுவனத்திலிருந்து பேசுவதாக கூறினார். மேலும் எனது ஆதார் கார்டை உபயோகித்து ஒரு பார்சல் வந்துள்ளதாகவும், அதில் சட்டத்திற்கு புறம்பான போதை பொருள் உள்ளதாகவும் கூறிய அவர் மும்பை போலீஸ் உங்களிடம் விசாரணை செய்ய வேண்டும் எனக் கூறினார். மற்றொரு நபர் பேசியபோது, தான் சைபர் கிரைம் இன்வெஸ்டிகேஷன் ஆபீசர் பேசுவதாகவும், நீங்கள் போதைப்பொருட்கள் கொண்ட பார்சலை அனுப்பியுள்ளதால், உங்களை கைது செய்ய வருவதாகவும் மிரட்டினார்.
பின்னர் Skype Call மூலமாக தொடர்பு கொண்ட அதே நபர், நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்றும், நீங்கள் வங்கிக் கணக்கில் வைத்திருக்கும் பணம் முறையற்ற பணம். அது முறையான பணம் என்று நிரூபிக்க நாங்கள் சொல்லும் வங்கி கணக்குக்கு உடனே பணத்தை அனுப்புங்கள். விசாரணை முடிந்து தங்கள் மீது உண்மை நிரூபிக்கப்பட்டால் பணத்தை திருப்பி அனுப்பப்படும் எனவும் கூறினார். இதனால் பயந்து போன நான் எனது வங்கிக் கணக்கில் இருந்த ரூ. 3,64,000- பணத்தை அவர்கள் சொன்ன வங்கிக் கணக்கில் அனுப்பினேன். அதன் பின்னர் அவர்கள் பேசிய செல்போன் எண் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. என்னை திட்டம் போட்டு ஏமாற்றிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார்.
இது குறித்து சென்னை பெருநகர காவல், கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் எதிரி பயன்படுத்திய செல்போன் எண், வங்கி கணக்கு, மற்றும் இணையதள முகவரியைக் கொண்டு தீவிர விசாரணை செய்ததில், எதிரிகள் கேரளாவில் இருந்து மேற்படி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
அதனையடுத்து தனிப்படை போலீசார் கேரள மாநிலம் கொல்லம் சென்று பண மோசடியில் ஈடுபட்ட நிதின் ஜோசப் (31), ரமீஸ் (31) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 ஐபோன்கள் உட்பட 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்ட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் நேற்று (29.07.2024) சென்னை, சைதாப்பேட்டை 11வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆகவே, பெருநகர சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் பொதுமக்கள் இது போன்ற மோசடிகளில் சிக்கி கொள்ளாமல் கவனமுடன் செயல்பட வேண்டும் என்றும், அடையாளம் தெரியாத தொலைபேசி எண்களில் இருந்து தொடர்பு கொள்ளும் நபர்களிடம் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும் என்றும் முன்பின் தெரியாத நபர்களிடம் நம்முடைய தனிப்பட்ட வங்கி கணக்கு உள்ளிட்ட வங்கி சார்ந்த விவரங்களை தெரிவிக்க கூடாது என்றும், அடையாளம் தெரியாக வங்கி கணக்குகளுக்கு பணத்கை அனுப்பி ஏமாற்றம் அடைய வேண்டாம் என்றும், வீடியோ கால்களில் போலீஸ் உடை அணிந்து கொண்டு பேசும் நபர்களிடம் ஏமாற்றம் அடைய வேண்டாம் என்றும், ஏதேனும் பணம் இழப்பு உள்ளிட்ட மோசடிகளில் சிக்கினால் உடனடியாக சைபர் கிரைம் உதவி எண் 1930 மற்றும் சைபர் கிரைம் இணையதள முகவரி https://cybercrime.gov.in ஆகியவற்றிற்கு உடனடியாக தெரிவிக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளார்.