அமெரிக்கா தூதரக அலுவலகத்தில் விசாவுக்காக போலி சான்றிதழ்: ஆந்திரா கும்பல் 5 பேர் கைது: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பேட்டி
சென்னை, அமெரிக்க தூதரக அலுவலகத்தில் விசா பெறுவதற்காக போலியான சான்றிதழ்களை சமர்ப்பித்த நபர் மற்றும் அதனை தயாரித்துக் கொடுத்த ஆந்திராவைச் சேர்ந்த 4 பேர் கும்பலை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

அது தொடர்பாக கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் இன்று நிருபர்களுக்குப் பேட்டியளித்த போது கூறியதாவது:–
சென்னை, அமெரிக்கத் தூதரக அலுவல மண்டல பாதுகாப்பு அதிகாரி சென்னை நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், ‘‘கல்லம் சாய் ராம் ரெட்டி என்பவர் வேலைக்காக அமெரிக்கா செல்ல விசா கேட்டு விண்ணப்பித்திருந்தார். கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதியன்று நேர்முகத் தேர்விற்கு வந்தார். அப்போது அவர் சமர்ப்பித்த பணி அனுபவ சான்றிதழ்கள், ஆந்திரா பல்கலைக்கழக கல்விச் சான்றிதழ், விசாகப்பட்டினம் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் டிகிரி சான்றிதழ் மற்றும் மார்க் ஷீட் உள்ளிட்ட அனைத்தும் போலியானது என தெரியவந்தது. அது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தியதில் அவற்றை ஆந்திர பிரதேசம், சித்தூரை சேர்ந்த ருஷ்கேஷ் ரெட்டி, திவாகர் ரெட்டி ஆகியோர் தயார் செய்து கொடுத்ததாக கல்லம் சாய் ராம் ரெட்டி தெரிவித்தார். எனவே போலியான சான்றிதழ்களை தயார் செய்த சம்மந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறியிருந்தார்.
இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளும்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி கல்லம் சாய் ரெட்டியை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது ஆந்திரா மாநிலம், சித்தூரில் சித்தார்த்தா கன்சல்ட்டன்சி நடத்தி வரும் ருஷ்கேஷ் ரெட்டி, திவாகர் ரெட்டி ஆகியோர் மேற்படி சான்றிதழ்களை தயார் செய்து கொடுத்தது தெரியவந்தது. அதனையடுத்து மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் செந்தில்குமாரி அறிவுரையின் பேரில், துணைக்கமிஷனர் நிஷா மேற்பார்வையில் மத்திய குற்றப்பிரிவு, மோசடி புலனாய்வுபிரிவு இன்ஸ்பெக்டர்கள் ஜெயவனிதா, ஷீஜாராணி தலைமையிலான தனிப்படையினர் ஆந்திரா மாநிலம் சித்தூருக்கு விரைந்து சென்றனர்.
அங்கு பதுங்கியிருந்த ருஷ்கேஷ் ரெட்டி (வயது 33), திவாகர் ரெட்டி (32) ஆகிய இருவரையும் கைது செய்தனர். பிஇ இசிஇ படித்துள்ள ருஷ்கேஷ் ரெட்டியும், பிடெக் படித்துள்ள திவாகர் ரெட்டியும் சித்தூர் பழமநேரில் SWANK Store என்ற பெயரில் ஜவுளிக்கடை நடத்தி வந்துள்ளனர். அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஐதராபாத் அமீர் பேட்டையில் சித்தார்த்தா கன்சல்டன்சி என்ற பெயரில் ஒரு அலுவலகம் தொடங்கி வெளிநாடு செல்பவர்களுக்கு போலியான கல்வி சான்றிதழ்கள் மற்றும் வேலை செய்தது போன்ற அனுபவ சான்றிதழ்களை தயாரித்துக் கொடுத்துள்ளனர். மேலும் தங்கள் கன்சலட்டன்சிக்கு சுலேகா செயலி மூலமாக தொடர்பு கொள்ளும் நபர்களுக்கு போலி சான்றிதழ்கள் தயாரித்து கொடுத்துள்ளார்.
சென்னை வில்லிவாக்கத்திலிலுள்ள முகமது ரியாஸ், மகேஷ்வரன் ஆகியோர் நடத்தி வரும் IIISTR (Indian Institute of Integrated Science & Technology and Research) என்ற நிறுவனம் மூலமாக போலி சான்றிதழ்களை பெற்று கொடுத்துள்ளனர். அதனையடுத்து முகமது ரியாஸ் (-30), நொளம்பூரைச் சேர்ந்த மகேஸ்வரன் ஆகியோரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போலி ஆவணங்கள் தயார் செய்ய பயன்படுத்திய 4 சிபியூக்கள், 2 மானிட்டர்கள், 2 லேப்டாப், 2 டேப்லட் போன்கள், 8 செல்போன்கள், எப்சன் பலர் பிரிண்டர் மிஷின் மற்றும் நிரப்பியும், நிரப்பப்டாத காலிங்க பல்கலைக்கழகம், ஷைன் பல்கலைக்கழகம், சுவாமி விவேகானந்தா போர்டு ஆப் செகண்டரி கல்வி நிறுவனம் ஆகியவற்றின் 500க்கும் மேற்பட்ட போலி கல்வி சான்றிதழ்கள் கைப்பற்றப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டு முதல் இந்த போலி நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், ஐதரா பாத்திலும் இது போன்ற ஏஜென்டுகளுடன் தொடர்புள்ளதாகவும் கைதான அகமது ரியாஸ் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர். விசாரணைக்குப் பின்னர் கைதான நபர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.