போதை மறுவாழ்வு மையத்தில் வாலிபர் இறந்த வழக்கில் உரிமையாளர் உள்பட 3 பேர் கைது

193

சென்னை, வளசரவாக்கம் பகுதியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த நபர் இறந்த வழக்கில் மறுவாழ்வு இல்ல உரிமையாளர் உட்பட 3 நபர்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, ஆதம்பாக்கம், அம்பேத்கர் நகரில் வசித்து வந்த விஜய், 28 என்ற ஆட்டோ ஓட்டுநர் மதுபோதைக்கு அடிமையானதால், அவரது குடும்பத்தினர் 12.09.2023 அன்று விஜயை, வளசரவாக்கம், ஓம்சக்தி நகரிலுள்ள கிரீன் லைப் பவுண்டேஷன் என்ற போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேற்படி மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த விஜய்க்கு கடந்த 25.11.2023 அன்று மாலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், மறுவாழ்வு மையத்தின் ஊழியர்கள் விஜயை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, விஜய் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து, விஜயின் சகோதரர் கொடுத்த புகாரின் மீது R-9 வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இயற்கைக்கு மாறான மரணம் பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

வளசரவாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்ததில், சம்பவத்தன்று விஜய்க்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டபோது, மேற்படி போதை மறுவாழ்வு மையத்தின் ஊழியர்கள் விஜய்யை ஏன் நடிக்கிறாய் என லேசாக அடித்துள்ளதும், மருத்துவமனைக்கு தாமதமாக அழைத்து சென்றபோது விஜய் இறந்துள்ளதும், பின்னர் சம்பவ இடத்திலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை அழித்துள்ளதும் தெரியவந்தது. அதனையடுத்து மறுவாழ்வு மையத்தின் உரிமையாளர் குரூஸ் (எ) குரு, 34, வினோத்குமார், 41, அஜய், 19 ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சிசிடிவி கேமராக்களின் ஹார்டு டிஸ்க் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட எதிரிகள் மூவரும் விசாரணைக்குப் பின்னர் நேற்று (26.11.2023) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.