இனி மெரீனாவில் வாரந்தோறும் காவல்துறையினரின் இன்னிசை நிகழ்ச்சி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்தார்

173

இந்தியாவிலேய முதன்முறையாக சென்னை மெரினா கடற்கரையில் சென்னை பெருநகர காவல்துறையின் இசைக்குழுவினர் இசை நிகழ்ச்சியை டிஜிபி சங்கர்ஜிவால், போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் முன்னிலையில் தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்தார்.

மக்கள் தொடர்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகவும், இந்தியாவிலேயே முதன்முறையாக, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்துக்கு எதிரே உள்ள திறந்தவெளி அரங்கில், சென்னை பெருநகர காவல்துறையின் பேண்டு வாத்தியம் மற்றும் பெண்கள் பேக் பைப்பர் இசை நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று (25.11.2023) முதல் இந்த இசை நிகழ்ச்சி ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை நடைபெறும். இன்று முதல் துவங்கப்பட்ட இந்த இசை நிகழ்ச்சியின் துவக்க விழாவை இளைஞர் நலன் & விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின அணிவகுப்புகளின் போது, கிரேட்டர் சென்னை காவல்துறையின் இசைக்குழுக்கள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்தியாவில் முதன்முறையாக, சென்னை பெருநகர காவல்துறையில் அண்மையில் இணைக்கப்பட்ட அனைத்து மகளிர் பேக்பைப்பர் இசைக்குழுவினர், பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளது. உலகெங்கிலும் உள்ள முக்கிய நகரங்களில் இதுபோன்ற இசை நிகழ்ச்சிகள் ஏற்கனவே பொது இடங்களில் நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.