கூவம் ஆற்றில் தவறி விழுந்த 70 வயது மூதாட்டி: படகில் சென்று மீட்ட திருவல்லிக்கேணி காவல்துறையினர்

164

திருவல்லிக்கேணி அருகே கூவம் கரையோரம் தவறி விழுந்த மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி படகு மூலம் சென்று மீட்பு. காவல் கரங்கள் மூலம் முதலதவி அளிக்கப்பட்டு, முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.


இன்று (14.11.2023) காலை சுமார் 9.30 மணியளிவில், திருவல்லிக்கேணி, விக்டோரியா ஹாஸ்டல் பின்புறமுள்ள கூவம் கரையோரத்தில் ஒரு வயதான பெண்மணி விழுந்து விட்டதாக, காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருவல்லிக்கேணி உதவி ஆணையாளர் தலைமையில், திருவல்லிக்கேணி காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது, அங்கு சிறிய பாலத்திலிருந்து கீழே கூவம் கரையோரம் விழுந்த வயதான பெண்மணி மழையில்

நனைந்தபடி அவதிப்பட்டுக் கொண்டிருந்தது தெரியவந்தது. காவல் குழுவினர் உடனே, தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்ததின்பேரில், அங்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் ரப்பர் படகு மூலம் கூவம் ஆற்றில் சென்று அங்கு மழையில் நனைந்தபடி அவதிப்பட்டுக் கொண்டிருந்த வயதான பெண்மணியை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். காவல் குழுவினர் மற்றும் சென்னை பெருநகர காவல் கரங்கள் அமைப்பினர் மீட்கப்பட்ட வயதான பெண்மணிக்கு முதலுதவி அளித்து, பெண் காவலர்கள் கொண்டு வேறு உடை அணியச்செய்து, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.

விசாரணையில் மீட்கப்பட்ட வயதான பெண்மணி கன்னியம்மாள் (வயது 70) என்பதும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. அதன்பேரில், சென்னை பெருநகர காவல் கரங்கள் குழுவினர் மீட்கப்பட்ட கன்னியம்மாள் என்பவரை பரணிபுத்தூர் அருகேயுள்ள தனியார் முதியோர் இல்லத்தில் சேர்த்தனர். தக்க சமயத்தில் விரைந்து செயல்பட்டு, கூவம் ஆற்றங்கரையோரம் விழுந்த மூதாட்டியை மீட்டு சிகிச்சை அளித்து, முதியோர் இல்லத்தில் சேர்த்த திருவல்லிக்கேணி காவல் குழுவினர் மற்றும் சென்னை பெருநகர காவல் கரங்கள் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் வெகுவாகப் பாராட்டினார்.