சென்னை, வில்லிவாக்கம் பகுதியில் வீட்டில் நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, வில்லிவாக்கம், 3வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார் (43). வில்லிவாக்கம் பாலியம்மன் கோயில் அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்று (06.11.2023) காலை 6.00 மணியளவில் கடையிலிருந்த போது, அங்கு வந்த ஒரு நபர் மேற்படி விஜயகுமாரிடம் கத்தியைக்காட்டி மிரட்டி ரூ. 800 வழிப்பறி செய்து கொண்டு தப்பியுள்ளார். இது குறித்து விஜயகுமார் வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. வில்லிவாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட ராணிப்பேட்டையைச் சேர்ந்த கார்த்திக் (27) என்பவரை கைது செய்தனர். மேலும் போலீசாரின் விசாரணையில் கார்த்திக் வீட்டில் நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அதன் பேரில் போலீசார் மேற்படி கார்த்திக் வீட்டை சோதனை செய்து அங்கு பதுக்கி வைத்திருந்த 2 நாட்டு வெடிகுண்டுகள், 1 கத்தி மற்றும் ரொக்கம் ரூ.500 பறிமுதல் செய்யப்பட்டது. கார்த்திக் மீது ஏற்கனவே 4 வழக்குகள் உள்ளதும், ஒரு முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளதும், தன்னுடைய எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக வீட்டில் நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணைக்குப்பிறகு கைது செய்யப்பட்ட கார்த்திக் நீதிமன்றத்தில் இன்று (07.11.2023) ஆஜர் செய்யப்படவுள்ளார்.