சென்னை கொத்தவால் சாவடியில் 539 கிலோ குட்கா பறிமுதல்:

163

சென்னை, கொத்தவால்சாவடி பகுதியில் குட்கா புகையிலை கடத்தி பதுக்கி வைத்திருந்த 2 நபர்களை கைது செய்த போலீசார் 539.15 கிலோ குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் அவர்களின் ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ (DABToP -Drive Against Banned Tobacco Products) மூலம் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் சென்னை பெருநகரில் தீவிரமாக கண்காணித்து, குட்கா, மாவா, ஹான்ஸ் ஆகிய தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வருபவர்கள், தயார் செய்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, கொத்தவால்சாவடி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் நேற்று (12.10.2023), மாலை, கொத்தவால்சாவடி, வரதா முத்தியப்பன் தெருவில் உள்ள ஒரு வீட்டை ரகசியமாக கண்காணித்தபோது, அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பெருமளவு பதுக்கி வைத்திருந்தது உறுதி செய்யப்பட்டது. அதன்பேரில், சட்டவிரோதமாக குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருந்த உக்கம் சந்த், 36, நாராயன்ராம் ஆகிய இருவரை கைது செய்தனர். மேற்படி வீட்டிலிருந்து 539.15 கிலோ எடை கொண்ட ஹான்ஸ், கூலிப், ரெமோ உள்ளிட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட எதிரிகள் இருவரும் விசாரணைக்குப் பின்னர் இன்று (13.10.2023) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.