சென்னையில் 9 நாளில் 169 பேர் கைது * 364 கிலோ குட்கா பறிமுதல்

151

சென்னை நகரில் போலீசார் கடந்த 9 நாட்கள் நடத்திய அதிரடி போதைப்பொருள் ஒழிப்பு ரெய்டில் 169 பேரை கைது செய்து 364 கிலோ குட்காவை பறிமுதல் செய்துள்ளனர்.


தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘என்ற சிறப்பு சோதனை மேற்கொண்டு, குட்கா மற்றும் மாவா புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 2ம் தேதி முதல் 10ம் தேதி வரை 9 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதனையடுத்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 167 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 169 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 364 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் 1 கிலோ மாவா, பறிமுதல் செய்யப்பட்டது. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் உள்பட சட்டவிரோத பொருட்களை கடத்தி வருபவர்கள், பதுக்கி வைப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.