தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின்படி பொது இடங்களில் உள்ள 93 ஜாதிய அடையாளங்களை கிராம மக்கள் தாமாக முன்வந்து அழித்தனர். இதுவரை 6,470 இடங்களில் ஜாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்பி பாலாஜி சரவணன் பதவி ஏற்ற பிறகு பொதுமக்களிடையே பல்வேறு சீர்த்திருத்தங்களை செய்து வருகிறார். தூத்துக்குடியில் அடிக்கடி ஏற்படும் ஜாதி பிரச்சினைகைளை களைய மாற்றத்தை தேடி என்ற திட்டம் மூலம் மக்களை நேரில் சந்தித்து அவர்கள் உறுதிமொழி ஏற்று வருகின்றனர். அந்த வகையில் பொதுமக்கள் தாமாகவே முன் வந்து தெருக்களில் சுவர்களில் மின்கம்பங்களில் எழுதப்பட்டுள்ள ஜாதிய அடையாளங்களை அழித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நேற்று (29.09.2023) திருச்செந்தூர் உட்கோட்டத்தில் திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குமாரபுரம், திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வண்ணான்துறைவிளை, ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரத்னாபுரி, ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேர்ந்தமங்கலம், குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கூர் ஆகிய பகுதிகளில் 40 மின்கம்பங்களிலும் ஜாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டன.
மேலும் ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் சேரகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரியநாயகிபுரம் பகுதியில் மின்கம்பங்கள் 5, பொதுசுவர் 1 என 6 இடங்களிலும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தலையால் நடந்தான்குளம் பகுதியில் மின்கம்பங்கள் 15, பாலம் 1 என 16 இடங்களிலும் ஜாதிய அடையாளங்களை பொதுமக்கள் பெயிண்ட் பூசி அழித்தனர். மேலும் சாத்தான்குளம் உட்கோட்டத்தில் சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திரப்பூர், புதுகிணறு ஆகிய பகுதிகளில் மின்கம்பங்கள் 29, பாலம் 2 என 31 இடங்கள் உட்பட இன்று ஒரே நாளில் 93 இடங்களில் ஊர்த்தலைவர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் அந்தந்த பகுதி மக்கள் தாமாகவே முன்வந்து வெள்ளை நிற பெயிண்டால் ஜாதிய அடையாளங்களை அழித்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 6470 இடங்களில் இருந்த ஜாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக தனது பாராட்டுக்களை பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார்.