சென்னை, ஆவடி காவல் ஆணையரக எல்லை, ஆட்டாந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (54). இவர் கடந்த 07.08.2023ம் தேதி ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரிடம் ஒரு புகார் மனு அளித்தார்.
திருவள்ளுர் மாவட்டம், பொன்னேரி, பாடியநல்லூர் பகுதியில் வெங்கடேசனின் தந்தை அனுபவத்தில் இருந்து வந்த 78 சென்ட் நிலம், அவரது இறப்பிற்கு வெங்கடேசனின் அனுபவத்தில் இருந்து வருகிறது. இந்த நிலத்திற்கு சம்மந்தமில்லாத ராமைய்யா என்பவர் ரகுபதி என்பவரது பெயரில் ஆள்மாறாட்டம் செய்து, அவரை வெங்கடேசனின் தந்தைக்கு வாரிசாக குறிப்பிட்டு போலியான பொது அதிகார பத்திரத்தை செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர்.
அதனையடுத்து 78 செண்ட் நிலத்திற்கு பொது அதிகாரம் மூலம் மனைகளாக பிரித்து 13 நபர்களுக்கு ரூ. 3 கோடிக்கு விற்பனை செய்து மோசடி செய்துள்ளனர். அது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளும்படி வெங்கடேசன் அந்த புகார் மனுவில் கூறியிருந்தார். அந்த புகார் மீது கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில் நிலமோசடி தடுப்புப்பிரிவு ஆய்வாளர் செங்குட்டுவன் விசாரணை மேற்கொண்டார். அதனையடுத்து இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த திருவிக நகரைச் சேர்ந்த மோசடி நபர் ராமைய்யா (62) என்பவரை 20.09.2023 கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.