காணாமல் போன குழந்தை ஒரே நாளில் மீட்பு: மதுரை பேரையூர் போலீசாருக்கு டிஜிபி சங்கர்ஜிவால் பாராட்டு

194

காணாமல் போன பச்சிளங்குழந்தையை ஒரே நாளில் பத்திரமாக மீட்ட மதுரை பேரையூர் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட தனிப்படையினரை டிஜிபி சங்கர்ஜிவால் நேரில் அழைத்து நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

மதுரை மாவட்டம், பேரையூர் காவல் நிலைய எல்லையில் கடந்த மாதம் 7ம் தேதியன்று பிறந்த ஆண் குழந்தை காணாமல் போனது. அது தொடர்பாக சந்தையூர் கிராம செவிலியர் காந்திமதி கொடுத்த புகாரின் பேரில் 27.08.2023 அன்று போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். குழந்தையை மீட்க பேரையூர் வட்ட பெண் இன்ஸ்பெக்டர் மதனகலா தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் ஈரோடு, விருதுநகர், பெங்களூர் ஆகிய இடங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதனையடுத்து 28.08.2023 அன்று பெங்களூரில் தேஜஸ்வரி (வயது 36) என்பவரிடம் குழந்தை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பிறந்து 16 நாள் ஆன குழந்தை மீட்கப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். வழக்கு பதிவு செய்யப்பட்டு 24 மணி நேரத்திலேயே குழந்தையை கண்டுபிடித்து, குற்றவாளிகளை கைது செய்த பேரையூர் இன்ஸ்பெக்டர் மதனகலா, சார்பு ஆய்வாளர் ஜெயம்பாண்டியன், தலைமைக்காவலர் ராஜேஷ் கண்ணா (சேடப்பட்டி காவல் நிலையம்), முதல் நிலைக்காவலர் முத்து மாணிக்கம், பெண் முதல் நிலைக் காவலர் குருரத்தினம் ஆகியோரை டிஜிபி சங்கர்ஜிவால் நேரில் அழைத்து நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.