ஒரே நாளில் 670 ரவுடிகளிடம் விசாரணை: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் அதிரடி நடவடிக்கை

172

சென்னை நகரில் ஒரே நாளில் 670 ரவுடிகளிடம் நேரடி விசாரணை நடத்தி எச்சரிக்கப்பட்டும், நீதிமன்ற பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டும் போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

சென்னை நகரில் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பதவி ஏற்றதும் ரவுடிகள் இல்லாத நகரமாக சென்னை உருவாக்கப்படும் என பேட்டியளித்தார். அதனையடுத்து அவர் பதவி ஏற்ற கடந்த வெள்ளிக்கிழமை முதல் ரவுடிகள் ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் போலீசார் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர், நேற்று சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகள் மற்றும் வெட்டுக்காயம் ஏற்படுத்தும் குற்றவாளிகளுக்கு எதிராக ஒரு நாள் சிறப்பு தணிக்கை (DARE) நடத்த கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார். அதன் பேரில் ஹிஸ்டரி ஷீட் ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கையில் 670 குற்றவாளிகள் நேரில் சென்று விசாரித்தும் அவர்களின் நடவடிக்கைகள் கண்காணித்தும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது.

ஏற்கனவே, 608 சரித்திரப் பதிவேடு போக்கிரி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நேற்று நடந்த சிறப்பு சோதனையில் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி கைது செய்யப்பட்டும், நீண்ட நாட்கள் தலைமறைவாக இருந்த குற்றவாளியின் இருப்பிடம் அறிந்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தவிர, கடந்த 2 மாதங்களில் சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவில் நிலுவையில் உள்ள நீதிமன்ற பிடியாணைகளில் 15 குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நீதிமன்ற பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சென்னை நகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.