சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் ‘பொதுமக்கள் மெகா குறைதீர் முகாமில்’ பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற்றார். மேலும் 12 காவல் மாவட்ட துணை ஆணையாளர்களும் குறை தீர் மனுக்களை பெற்றனர். ஒரே நாளில் 618 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

தமிழ்நாடு முதல்வர் காவல் ஆணையரகங்கள் மற்றும் காவல் மாவட்டங்களில் காவல் உயர் அதிகாரிகள் பொதுமக்கள் குறைதீர் முகாம்கள் நடத்தி, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க ஆணையிட்டுள்ளார். அதன்படி சென்னை பெருநகரில் வசிக்கும் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க “பொதுமக்கள் மெகா குறைதீர் முகாம்” நடத்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்திப் ராய் ராத்தோர் உத்தரவின் பேரில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
அதன்படி இன்று (08.07.2023) சனிக்கிழமை பகல் 12 மணியளவில் சென்னை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ராத்தோர் கீழ்ப்பாக்கம், துணை ஆணையாளர் அலுவலக வளாகத்தில் நடந்த “பொதுமக்கள் மெகா குறை தீர் முகாமில்” கலந்து கொண்டு பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து, அவர்களிடமிருந்து குறைதீர் மனுக்களை பெற்று, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதே போல, இன்று (08.07.2023) காலை 9.30 மணி முதல் சென்னை பெருநகர காவல் எல்லையில் உள்ள பூக்கடை, வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு, அண்ணாநகர், கொளத்தூர், கோயம்பேடு, திருவல்லிக்கேணி, கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர், அடையார், தி.நகர் மற்றும் புனித தோமையர் மலை ஆகிய 12 காவல் மாவட்டங்களிலும் அந்தந்த காவல் மாவட்ட துணை ஆணையாளர்கள் தலைமையில் பொதுமக்கள் மெகா குறை தீர் முகாம் நடத்தி பொதுமக்களை நேரில் சந்தித்து 641 ஆண்கள் 361 பெண்கள் என மொத்தம் 1,002 குறைதீர் மனுக்களை பெற்று இதில் 618 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. மற்ற மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.