கொலை வழக்கில் புதுக்கோட்டை எஸ்பியிடம் சபாஷ் பெற்ற கோட்டைப்பட்டினம் காவல் ஸ்பெஷல் டீம்

239

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி காவல் நிலைய சரகத்தில் நடந்த பெண் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்து நகைகளை கைப்பற்றிய தனிப்படையினரை எஸ்பி வந்திதா பாண்டே நற்பணி சான்று வழங்கி பாராட்டினார்.

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி காவல் நிலைய எல்லையில் வசித்து வந்தவர், காரக்கோட்டையைச் சேர்ந்த சுலோசனா (வயது 60). இவர் காணாமல் போனதாக வந்த புகாரின் பேரில் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் சுலோசனா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. புதுக்கோட்டை எஸ்பி வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் கோட்டைப்பட்டனம் டிஎஸ்பி கவுதமன் மற்றும் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தினர். அதனையடுத்து இந்த கொலை வழக்கு தொடர்பாக சோமநாதன் பட்டினத்தைச் சேர்ந்த செந்தில் குமார் (வயது 30) என்பவரை கடந்த 5ம் தேதியன்று தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான காரக்கோட்டை, கோழிச்சனம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (வயது 51) என்பவரை மணமேல்குடி காவல் நிலைய காவல் ஆய்வாளர் குணசேகரன் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 17ம் தேதியன்று அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணைக்குப் பின்னர் ரமேஷ் அறந்தாங்கி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் சிறப்பாக திறமையாக செயல்பட்ட கோட்டைப்பட்டிணம் டிஎஸ்பி கவுதம் தலைமையிலான தனிப்படையினரை மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டத்தில் புதுக்கோட்டை எஸ்பி வந்திதா பாண்டே நற்பணி சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்து ஊக்கப்படுத்தினார்.