அடுத்தடுத்து நடந்த 3 கொலைகளில் கொலையாளிகள் 9 பேர் உடனடியாக கைது: தாம்பரம் காவல் ஆணையரகம் துரித நடவடிக்கை
சென்னை தாம்பரம் காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட குரோம்பேட்டை, தாம்பரம், குன்றத்தூர் பகுதிகளில் அடுத்தடுத்து நடந்த 3 கொலைகளில் கொலையாளிகள் 9 பேர் துரிதமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தாம்பரம்
தாம்பரம், சென்னை, இரும்புலியூரைச் சேர்ந்தவர் கார்த்திக் ராஜா (26) மற்றும் அவரது இளைய சகோதரர் சதிஷ். இருவரும் தாம்பரம் பேருந்து நிலையம், அம்பேத்கர் சிலை அருகே உள்ள வி.சி.க ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளனர். பின்பு அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையில் இருவரும் பிரிந்து வந்து தன்னிச்சையாக ஆட்டோ ஓட்டி வந்துள்ளனர். இந்நிலையில் ஆனந்தன் என்பவர் தலைவராக இருக்கும் மக்கள் தளபதி ஆட்டோ ஸ்டாண்டில் உள்ள அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களும் தாம்பரம் பேருந்து நிலையம் அருகே வரிசையில் நின்று பயணிகளை ஏற்றி வந்துள்ளனர். இந்நிலையில் கார்த்திக் ராஜா, சதீஷ் இருவரும் வரிசையில் நின்று பயணிகளை ஏற்றாமல் அவர்களின் விருப்பம் போல் ஆட்டோவை ஓட்டி வந்ததால் அவர்களுக்குள் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இச்சூழ்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கார்த்திக்ராஜாவிடம் ஆனந்தன் மற்றும் சில ஆட்டோ ஓட்டுநர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் கார்த்திக் ராஜா நான் இப்படித்தான் ஆட்டோ ஓட்டுவேன் என்று கூறி சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தன் கடந்த 27.05.2024 ஆம் தேதி இரவு 11.15 மணியளவில் கார்த்திக் ராஜாவின் உறவினராக அசோக் என்பவர் மூலமாக கார்த்திக் ராஜாவை தாம்பரம் பேருந்து நிலையம், அம்பேத்கர் சிலை அருகே சமாதானம் பேச வரவழைத்துள்ளார். அங்கு நின்றபடி பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த கும்பல் கார்த்திக்ராஜவை வெட்டிக் விட்டு தப்பியோடி விட்டனர். ஆஸ்பத்திரி செல்லும் வழியில் கார்த்திக் ராஜா உயிரிழந்தார், இந்தச் சம்பவம் தொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக் ராஜாவை வெட்டிக் கொன்ற ஆனந்த் (42), சிவக்குமார் (எ) ரஞ்சித் (28), அஜித் குமார் (28), கவின் ராஜ் (31) மற்றும் சாம்ராஜ் (40) ஆகிய 5 நபர்களையும் 12 மணி நேரத்துக்குள் துரிதமாக கைது செய்தனர்.
குரோம்பேட்டை
சென்னை, குரோம்பேட்டை, திருநீர்மலை மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் தாமஸ் (வயது 50). நாகல்கேணி பகுதியில் உள்ள லெதர் கம்பெனிகளில் இருந்து தோல் கழிவுகளை எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இவரிடம் கடந்த 22 ஆண்டுளுக்கு முன்பு லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தவர் சபரி (எ) பிரித்விராஜன். சபரி தற்போது நாகல்கேணி ரிலையன்ஸ் ஸ்மார்ட் பல்பொருள் அங்காடியில் பகுதி நேரமாக டிரைவராக

வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தாமசிடம் சபரி ரூ 28 ஆயிரம்- கடன் வாங்கியுள்ளார். ஆனால் சொன்ன நேரத்தில் சபரி கடனை திருப்பி தரமால் காலம் தாழ்த்தி வந்துள்ளார். கடந்த 27.05.2024ம் தேதி 8.50 மணியளவில், சபரியிடம் தாமஸ் செல்போனில் தொடர்பு கொண்டு பணத்தை திரும்ப கேட்டுள்ளார். சபரி ஒரு வாரம் கழித்து தருவதாக கூறியதை ஏற்காத தாமஸ் சபரியின் குடும்ப பெண்களை இழிவாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சபரி பணம் தருவதாக தாமசை அங்குள்ள மெக்கானிக் ஷாப்பிற்கு வரவழைத்து இரும்பு தகடைக் கொண்டு தாமஸின் முகம், தலை மற்றும் கையில் வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டடார். இது தொடர்பாக குரோம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் கொலையாளி சபரியை 28.05.2024 ஆம் தேதி அதிகாலை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.
குன்றத்தூர்
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (30). குன்றத்தூர், தெற்கு மலையம்பாக்கம் ஸ்ரீராம் செங்கல் சேம்பரில் தனது மனைவி செல்லம்மாள் மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தங்கி வேலை செய்து வந்தார். கடந்த 27.05.2024 அன்று காலை 8.30 மணியளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக செம்பரம்பாக்கம் ஏரிக்கரையோரம் மேப்பூர் செல்லும் மண் சாலை அருகே நடந்து சென்றார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த விஜய் (23), திருமலை (19) மற்றும் ஒரு இளஞ்சிறார் ஆகிய மூன்று நபர்கள் ராஜேஷிடம் கத்தியை காட்டி பணம் மற்றும் செல்போனை கேட்டு மிரட்டியுள்ளனர். அவர் தர மறுத்ததால் அவரது இடது பக்க நெற்றி, இடது பக்க பின் தலை மற்றும் இடது கை சுண்டு விரல் ஆகிய இடங்களில் கத்தியால் வெட்டி காயங்கள் ஏற்படுத்தி அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்றுள்ளனர். அதனையடுத்து ராஜேஷ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஏற்கனவே அவருக்கு நுரையீரலில் இருந்த பிரச்சினை காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு கடந்த 28.05.24 ஆம் தேதி அதிகாலை 2.05 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குன்றத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் கொலையாளிகள் விஜய், திருமலை இருவரையும் கைது செய்து கோர்ட் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர். மேற்கண்ட 3 கொலை வழக்குகளிலும், துரித நடவடிக்கை மேற்கொண்டு கொலையாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் வெகுவாக பாராட்டினார்.