கஞ்சா வியாபாரிகளின் 851 வங்கிக்கணக்குகள் முடக்கம்: * கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் அதிரடி நடவடிக்கை

201

சென்னை நகரில் கடந்த 2 ஆண்டுகளில் போதைப்பொருட்கள் தொடர்பான வழக்குகளில் 1,742 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு 851 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

சென்னை நகர போலீஸ் கமிஷனராக சந்தீப்ராய் ரத்தோர் பதவியேற்றதும் ரவுடிகள் ஒழிப்பு மற்றும் போதைப்பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்தந்த துணைக்கமிஷனர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு முக்கியமாக கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பதுக்குபவர்களை கண்காணித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை நகரில் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் இதுவரை 792 கஞ்சா கடத்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்ட 1,742 குற்றவாளிகளின் சொத்து மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அவற்றை சட்டரீதியாக முடக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டு, இதுவரையில் மொத்தம் 851 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக சென்னை நகர காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் நடப்பாண்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று வரை கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் வழக்கில் கைது செய்யப்பட்ட  49 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. கஞ்சா உள்பட போதைக் கடத்தல் ஆசாமிகள் மீது இந்த அதிரடி நடவடிக்கை தொடரும் என கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் எச்சரித்துள்ளார்.