வேப்பேரி, ஆர்கே நகரில் 75 கிலோ குட்கா, மாவா பறிமுதல்: 2 பேர் கைது

181

சென்னை, வேப்பேரி மற்றும் ஆர்.கே.நகர் பகுதியில் குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த 2 நபர்களை போலீசார் கைது செய்து 69.8 கிலோ குட்கா பாக்கெட்டுகள் மற்றும் 7.85 கிலோ மாவா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ (DABToP -Drive Against Banned Tobacco Products) மூலம் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் சென்னை பெருநகரில் தீவிரமாக கண்காணித்து, குட்கா, மாவா, ஹான்ஸ் ஆகிய தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வருபவர்கள், தயார் செய்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, G-1 வேப்பேரி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் நேற்று (30.08.2023), வேப்பேரி, டவுட்டன் மேம்பாலம் அடியிலுள்ள பையா காம்ப்ளக்சில் உள்ள பூட்டப்பட்டிருந்த சிறிய கடையின் வெளியே வைத்திருந்த 2 சாக்கு மூட்டைகளை சோதனை செய்தபோது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. அதன்பேரில், காவல் குழுவினர் 69.8 கிலோ எடை கொண்ட ஹான்ஸ். கூலிப், ஸ்வாகத் உட்பட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்தனர். மேலும், இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள மேற்படி கடையின் உரிமையாளரை காவல் குழுவினர் தேடி வருகின்றனர்.

இதே போல, H-6 ஆர்.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (30.08.2023) கொருக்குப்பேட்டை, அண்ணாநகர், பெரியார் சாலையில் உள்ள ஒரு வீட்டில் மாவா தயாரித்து விற்பனை செய்து வந்த 1.ஏகாம்பரம், வ/65, த/பெ.தங்கசாமி, பெரியார் சாலை, அண்ணாநகர், கொருக்குப்பேட்டை, 2.மகாலிங்கம், வ/53, த/பெ.நடராஜன், கருணாநிதி தெரு, அண்ணாநகர், கொருக்குப்பேட்டை ஆகிய இருவரை கைது செய்தனர். மேற்படி வீட்டிலிருந்து 7.85 எடை கொண்ட மாவா, ஜர்தா மற்றும் 1 மிக்சி பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட எதிரிகள் இருவரும் விசாரணைக்குப் பின்னர் நேற்று (30.08.2023) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.