காவல் கரங்கள் மூலம் மீட்கப்பட்ட 55 வயது பெண் உறவினர்களிடம் ஒப்படைப்பு: 4 ஆண்டுகளில் 9075 பேர் மீட்பு
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த காணாமல் போன பெண், காவல் கரங்கள் குழுவினர் மூலம் மீட்கப்பட்டு கூடுதல் காவல் ஆணையாளர் விஜயேந்திர பிதாரி முன்னிலையில் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
சென்னை நகரில் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் , கூடுதல் காவல் ஆணையர் (தலைமையிடம்) விஜயேந்திர பிதாரி மேற்பார்வையில் காவல் கரங்கள் குழு செயல்பட்டு வருகிறபு காவல்துறையினர் தொண்டு நிறுவன ஆர்வலர்களுடன் ஒருங்கிணைந்து கேட்பாரற்று, உதவிகள் அற்று, வீடுகளற்ற நிலையில் உடல்நிலை முடியாமலும், உதவிகள் கோரியும், தன்னிலை மறந்து மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை கண்டறிந்து உரிய மீட்கின்றனர். மேலும் அவர்களுக்கு மருத்துவ வசதி, உறைவிட வசதி வழங்கி பேணி பாதுகாத்து அவர்களின் குடும்பத்தினரை கண்டறிந்து ஒப்படைத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக கடந்த 14.10.2025 அன்று மறைமலை நகர், காட்டாங்கொளத்தூர் சந்திப்பில் மனநலம் பாதிக்கப்பட்ட சுமார் 55 வயதான பெண்மணி ஒருவர் ஆதரவின்றி சுற்றித்திரிந்தார். தகவல் கிடைத்ததும் காவல் கரங்கள் குழுவினர் தன்னார்வலர்கள் உதவியுடன் அவரை மீட்டனர். அவருக்கு உரிய சிகிச்சை அளித்து ராயப்பேட்டையில் உள்ள சென்னை மாநகராட்சியின் அன்பகம் காப்பகத்தில் தங்க வைத்து பராமரித்தனர்.
அந்தப் பெண்ணின் புகைப்படத்துடன் விவரங்களை சென்னை, தாம்பரம் காவல் ஆணையரகம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட கட்டுப்பாட்டறை மூலமாக அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் சமூக வலைதளத்திலும் தகவல் அளித்தனர். போலீசாரின் விசாரணையில் அந்தப் பெண்ணின் பெயர் தேவி என்பதும் 12.10.2025 அன்று காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
அதனையடுத்து அந்தப் பெண்ணின் மகள் பிரபா என்பவரை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, மீட்கப்பட்ட பெண்மணி தேவி என்பவர் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, ஆக்கூர் அரசு மருத்துவமனை எதிரில் உள்ள மல்லிகா நகரில் கணவர் மற்றும் குடும்பத்தாருடன் வசித்து வருவதும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டு சுமார் 20 வருடங்களாக மருத்துவ சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது.
கடந்த 12.10.2025 அன்று, பிரபாவின் பாட்டி மற்றும் மேற்படி பெண்மணி தேவி ஆகியோர் திருப்போரூரில் உள்ள உறவினரை பார்த்துவிட்டு, செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்தில் செல்லும்போது, தேவி திடீரென நடுவில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சென்று காணாமல் போயுள்ளார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், 12.10.2025 அன்று செங்கல்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
அதனையடுத்து இன்று (07.11.2025) சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) விஜயேந்திர பிதாரி மீட்கப்பட்ட பெண் தேவியை, காவல் கரங்கள் குழுவினர் செங்கல்பட்டு காவல்துறையினர் முன்னிலையில், அவரது மகள் பிரபா மற்றும் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார். தனது தாயாரை நல்ல முறையில் மீட்டு தங்களிடம் ஒப்படைத்த சென்னை பெருநகர காவல் அதிகாரிகள், காவல் கரங்கள் மற்றும் தன்னார்வலர்கள் குழுவினருக்கு மகள் பிரபா மற்றும் குடும்பத்தினர் கண்ணீர் மல்க நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.
கடந்த 2021ம் ஆண்டு முதல் இதுவரை 9,075 வீடற்ற, ஆதரவற்ற நிலையில் உள்ள மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 6,021 நபர்கள் காப்பகங்களில் தங்க வைத்தும், 1,469 நபர்கள் அவர்களது குடும்பத்துடன் மீள சேர்த்து வைக்கப்பட்டுள்ளனர். 1,152 நபர்கள் மனநல மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 433 நபர்கள் உள் நோயாளியாக பல்வேறு மருத்துவமனைகளில் உரிய உதவிகள் வழங்கப்பட்டு சிகிச்சை பெற்றும், வருகிறார்கள்.
மேலும், காவல் கரங்கள் உணவு உதவி வாகனம் மூலம் இதுவரை 4,11,436 உணவுகள் சேகரிக்கப்பட்டு, காப்பகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. உரிமைக் கோரப்படாத 5,913 இறந்த உடல்கள் தன்னார்வலர்கள் உதவியுடன் உரிய இறுதி மரியாதையுடன் நல்லடக்கம் செய்தும், காவல் கரங்கள் மையம் உதவி செய்து வருகின்றனர்.
சென்னை பெருநகர காவல் சரக பகுதிகளில் உதவிகள் கோரும் உறவுகளற்ற, வீடுகளற்ற நோய்வாய்பட்ட நபர்களுக்கு உதவிட 9444717100 என்ற காவல் கரங்கள் மைய உதவி எண்ணை தொடர்பு கொண்டு உதவிகள் பெற சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.