54 குண்டுகள் முழங்க தூத்துக்குடியில் காவலர் வீர வணக்க நாள் உறுதிமொழி ஏற்பு

159

காவல்துறையில் வீர மரணமடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் ‘காவலர் வீர வணக்க நாள்” உறுதிமொழி ஏற்று துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.

1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி லடாக் பகுதியில் ‘ஹாட் ஸ்பிரிங்ஸ்” என்ற இடத்தில் சீன இராணுவத்தினர் ஒளிந்திருந்து மேற்கொண்ட திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படை (CRPF) காவலர்கள் உயிரிழந்தனர். கடல் மட்டத்திலிருந்து பதினாராயிரம் அடி உயரத்தில் அன்று வீர மரணமடைந்த காவலர்களின் தியாகத்தை கடல் அலைகள் கண்ணுக்குத் தெரியும் இவ்விடத்தில் இருந்து நாம் இன்று நினைவு கூர்கிறோம்.

கடற்கரையானாலும், பனிமலைச் சிகரமானாலும், காவலர் பணி, இடர் நிறைந்தது. உனது வருங்காலத்திற்கு எனது தற்காலத்தை ஈந்தேன். நாளை உன் விடியலுக்கு இன்று நான் மடியத் தயார் என்று கூறி இவ்வாண்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நம்மைவிட்டு பிரிந்த காவல் குடும்பத்தினரின் எண்ணிக்கை 188. மடிந்த இவர்கள் விட்டுச் சென்ற பணிகளை செய்து முடிப்போம் என்று உறுதிபூண்டு, அவர்களின் வீரத்தியாகம் வீண்போகாது என்று இந்த காவலர் வீரவணக்க நாளில் உறுதி மொழி ஏற்கப்பட்டது. கடந்த 01.09.2022 முதல் 31.08.2023 வரை தமிழ்நாட்டைச் சேர்ந்த தலைமை காவலர் சுந்தரய்யா, பெண் தலைமை காவலர் ஷீலா ஜெபமணி, காவலர் நவநீதகிருஷ்ணன், ஆந்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த காவலர் பவன்குமார், அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த காவலர் சிங்கிரி மம்மாய் உள்பட 188 காவல்துறையினர் ‘உனது வருங்காலத்தில் எனது தற்காலத்தை ஈந்தேன்” என்று கூறி வீர மரணம் அடைந்துள்ளார்கள்.

இந்த காவலர் வீர வணக்க நாளில் அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அவர்களுக்கு அரசு மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் அஞ்சலி செலுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுனைமுருகன் மற்றும் உதவி ஆய்வாளர் நங்கையர் மூர்த்தி தலைமையில் ஆயுதப்படை போலீசார் 54 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர்.

இந்த வீர வணக்க நாள் நிகழ்ச்சியில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி ஊரகம் சுரேஷ், மணியாச்சி லோகேஷ்வரன், கோவில்பட்டி வெங்கடேஷ், விளாத்திகுளம் ஜெயச்சந்திரன், சாத்தான்குளம் அருள், காவல் ஆய்வாளர்கள் தூத்துக்குடி தென்பாகம் ராஜாராம், வடபாகம் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையம் மாரியம்மாள், தூத்துக்குடி போக்குவரத்து பிரிவு மயிலேறும்பெருமாள், மத்திய பாகம் அய்யப்பன் உட்பட காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.