வண்ணாரப்பேட்டையில் 48 கிலோ குட்கா பறிமுதல்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நடவடிக்கை

133

சென்னை, வண்ணாரப்பேட்டையில் குட்கா புகையிலை பொருட்களை வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்து 48.9 கிலோ குட்கா புகையிலைப் பாக்கெட்டுகளைப் பறிமுதல் செய்தனர்.

 

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ராத்தோர் ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ (DABToP -Drive Against Banned Tobacco Products) மூலம் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் சென்னை பெருநகரில் தீவிரமாக கண்காணித்து, குட்கா, மாவா, ஹான்ஸ் ஆகிய தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வருபவர்கள், தயார் செய்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக சென்னை, வண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் நேற்று (26.07.2023) மாலை, பழைய வண்ணாரப்பேட்டை, நரசய்யா தெருவில் உள்ள வீட்டில் குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அதன் பேரில், குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த பழைய வண்ணாரப்பேட்டை, ஜேம்ஸ் (வயது 26) வீட்டிலிருந்து 48.9 கிலோ எடை கொண்ட ஹான்ஸ், ரெமோ, சைனி உள்ளிட்ட குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய சந்திரசேகர் என்பவரை பிடிக்க காவல் குழுவினர் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட எதிரி ஜேம்ஸ் விசாரணைக்குப் பின்னர் நேற்று (26.07.2023) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.