சென்னை, கீழ்ப்பாக்கம் பகுதியில் ஹோட்டலில் அறை எடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 நபர்களை கைது செய்த போலீசார் பணம் ரூ. 21,500- பறிமுதல் செய்தனர்.

சென்னை பெருநகரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை வாங்குபவர்கள், விற்பவர்கள் மற்றும் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டதின் பேரில், அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக கீழ்ப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் நேற்று (25.11.2023) இரவு, கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் உள்ள ஒரு அறையில் கண்காணித்தபோது, அங்கு சிலர் பணம் பந்தயம் வைத்து சீட்டு கட்டுகளுடன் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன்பேரில் மேற்படி இடத்தில் பணம் பந்தயம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட பட்டாளத்தைச் சேர்ந்த சதிஷ்குமார், 34, அப்பு (எ) ஐதர் கௌதம், 34, கமல்ராஜ், 39, ஜீவன்குமார், 31 4 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய பணம் ரூ. 21,500 மற்றும் 4 சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக G-3 கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்ட 4 நபர்கள் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.