7 நாள் ரெய்டில் 24 திருட்டு வழக்குகளில் 35 பேர் கைது: 53 பவுன் நகை மற்றும் 2.80 லட்சம் பணம் பறிமுதல்: சென்னை நகர காவல்துறை நடவடிக்கை
சென்னை நகரில் கடந்த 7 நாட்களில் 24 திருட்டு வழக்குகளில் வழக்குகளில் தொடர்புடைய 3 பெண்கள் உட்பட 35 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 53 சவரன் தங்க நகைகள், 560 கிராம் வெள்ளி, 10 செல்போன்கள், பணம் ரூ. 2,80,610 மற்றும் 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னை பெருநகரில் வாகனங்கள் திருட்டு, செல்போன் பறிப்பு மற்றும் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய (DACO – Drive Against Crime Offendors) சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின் பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில். காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, வாகனங்கள் திருட்டு மற்றும் செல்போன் பறிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 25.02.2024 முதல் 02.03.2024 வரையிலான 7 நாட்களில் பதிவான சங்கிலி பறிப்பு, செல்போன் பறிப்பு மற்றும் திருட்டு தொடர்பான 18 வழக்குகளில் தொடர்புடைய 3 பெண்கள் மற்றும் 2 இளஞ்சிறார்கள் உட்பட 30 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 53 சவரன் தங்க நகைகள், 560 கிராம் வெள்ளி பொருட்கள், 10 செல்போன்கள், ரொக்கம் ரூ.2,80,610/-, 1 லேப்டாப், 1 டேப், 3 கைக்கடிகாரங்கள், 350 கிலோ இரும்பு பொருட்கள், மற்றும் 1 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், கடந்த 7 நாட்களில் மோட்டார் வாகன திருட்டு தொடர்பான 6 வழக்குகளில் தொடர்புடைய 1 இளஞ்சிறார் உட்பட 5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.