சென்னை, திருமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணாநகர், 2-வது அவென்யூ கோரா புட்ஸ் உணவக வளாகத்தில், காமதேனு ரோஸ் மில்க் மற்றும் ஊட்டி ரோஸ் மில்க் என்ற கடைகள் கடந்த 4 வருடங்களாக இயங்கி வருகிறது. ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கணேஷ் என்பவர் இங்கு ஊழியராக பணிபுரிகிறார்.


கடந்த 12.11.2023 அன்று இரவு 9 மணியளவில் கடையில் பணியிலிருந்த இருந்த போது, அங்குள்ள Roll Away Ice Cream கடையில் வேலை பார்த்து வந்தவரும், மேற்படி கணேஷ் என்பவருக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான கொரட்டுரை சேர்ந்த ஜெட்சன் பகத்சிங் (எ) ஜெட்சன் என்பவர் மேற்படி கோரா புட்ஸ் வளாகத்திற்கு மது போதையில் வந்து அங்கிருந்த ஆசாத் பாய் பிரியாணி கடையில் பிரியாணி ஆர்டர் செய்து விட்டு, உணவக வளாகத்திற்குள் சென்றுள்ளார்.
அப்போது அங்குள்ள காமதேனு ரோஸ் மில்க் கடையில் வேலை பார்க்கும் தேவராஜ் என்ற நபர் மீது மோதி வீண் தகராறு செய்து அவரை கன்னத்தில் அடித்ததாகவும், மேற்படி இச்சம்பவம் குறித்து தேவராஜ். கணேஷிடம் சென்று முறையிட்டதாகவும், கணேஷ் உடனே தேவராஜை அழைத்து கொண்டு அங்கிருந்த ஜெட்சனிடம் சென்று விசாரித்த போது மேற்படி ஜெட்சனுக்கும் கணேஷ்க்கும் வாய்தகராறு ஏற்பட்டு பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அங்கு உணவகத்தில் பணிபுரிந்த நபர்கள் தலையிட்டு இருவருக்குமிடையே ஏற்பட்ட கைகலப்பை தடுத்து சமாதானப்படுத்தி அனுப்பி உள்ளனர்.
மேற்படி கைகலப்பில் ஜெட்சன் என்பவரின் சட்டை கிழிந்து விட்டது. குடிபோதையிலிருந்த ஜெட்சன் தன் பகுதியில் குடியிருக்கும் தனக்கு பழக்கமான நண்பர் சசிகுமார் (எ) சாலமன் என்பவருக்கு போன் செய்து ஆட்களை அழைத்து வருமாறு கூறியுள்ளார். ஜெட்சனின் நண்பர்களான சசிகுமார் (எ) சாலமன், தென்றல்குமார் (எ) புஜ்ஜி, காளிதாஸ், நிதிஷ்குமார். சாமுவேல், ஆகாஷ், கைலாஷ் ஆகியோர் இரவு சுமார் 10 மணியளவில் சம்பவ இடம் சென்று அங்கு ஏற்கனவே இருந்த ஜெட்சனை சந்தித்து அவருடன் அனைவரும் சேர்ந்து இருந்த கேஷியர் ரூமுக்கு சென்று அங்கிருந்த கணேஷை கைகளால் மாறி மாறி தாக்கி ரத்தக் காயம் ஏற்படுத்தினார்கள்.
பின்னர் அங்கு பணிபுரிந்த நபர்கள் வந்து தடுக்கவே அவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்று விட்டனர். மேற்படி சம்பவம் தொடர்பாக கடந்த 13.11.2023 அன்று கணேஷ் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, வழக்கின் எதிரிகளை கைது செய்ய இரண்டு ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட கொரட்டூரைச் சேர்ந்த ஜெட்சன் பகத்சிங் (எ) ஜெட்சன், 22, தென்றல்குமார் (எ) புஜ்ஜி, 22, சசிகுமார் (எ) சாலமன், வ/22 ஆகிய மூவரையும் நேற்று (15.11.2023) கைது செய்தனர்.
போலீசாரின் விசாரணையில் கைது செய்யப்பட்ட எதிரிகள் மூவருக்கும் முன்வழக்குகள் ஏதும் இல்லை. வழக்கின் முக்கிய குற்றவாளி ஜெட்சன் என்பவர் கோரா புட் உணவகத்திலுள்ள Roll Away Ice Cream கடையில் கடந்த 3 மாதங்களாக பணிபுரிந்து வந்துள்ளார். வாதி கணேஷிற்கும், ஜெட்சன் என்பவருக்கும் அங்கு பணிபுரிந்த காலங்களில் எவ்விதமான முன்விரோதமோ பிரச்சனைகளோ ஏதுமில்லை. வாதி கணேஷிடம் ஜெட்சன் என்பவர் பணம் கேட்டு மிரட்டவும் இல்லை என தெரியவந்துள்ளது. இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள மற்ற எதிரிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 3 நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.