ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பைக்குகளை திருடிய 3 பேர் கைது: 6 பைக்குகள் பறிமுதல்

177

சென்னை சென்ட்ரல், ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி வளாகம் மற்றும் மதுரவாயல் சுற்றியுள்ள பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடிய 3 குற்றவாளிகளை போலீசார் கைது செய்து 6 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

மதுரவாயல் பைக் திருடன்

சென்னை, மதுரவாயல், மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் கோவர்தன், 21 என்பவர் கடந்த 20.12.2022 அன்று தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்து விட்டு மறுநாள் வந்து பார்த்த போது அவரது இருசக்கர வாகனம் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கோவர்தன் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

மதுரவாயல் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை செய்தும், சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதனையடுத்து கோவர்தனின் இருசக்கர வாகனத்தை திருடிய திருமுல்லைவாயலைச் சேர்ந்த கவுதம், 20 என்பவரை கைது செய்தனர். விசாரணையில் கைது செய்யப்பட்ட கௌதம் மதுரவாயல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடியது தெரியவந்தது. அவரிடமிருந்து திருடப்பட்ட 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கௌதம் மீது ஏற்கனவே 9 வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட கௌதம் விசாரணைக்குப் பின்னர் நேற்று (04.08.2023) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கைவரிசை

சென்னை, புது பெருங்களத்தூர், SHM நகர், ராஜாஜி தெருவில் வசிப்பவர் பார்த்தசாரதி, (வயது 36). கடந்த 06.12.2022 அன்று மதியம், சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை வளாகத்தில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டுச் சென்றார். சில மணி நேரம் கழித்து வந்து பார்த்தபோது, அவரது இருசக்கர வாகனம் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து பார்த்தசாரதி ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தினருகில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்தனர். அதனையத்து இருசக்கர வாகனத்தை திருடிய செங்குன்றம், விலங்காடுபாக்கத்தைச் சேர்ந்த முருகன் (36) என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்களை அவர் வெளியிட்டார்,

முருகன் தான் திருடும் பைக்குகளை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகம் மற்றும் சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடி, செங்குன்றம் பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வரும் தங்கபாண்டியன் என்பவரிடம் முருகன் விற்பனை செய்தது தெரியவந்தது. அதனையடுத்து தங்கபாண்டியனையும் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 1 இருசக்கர வாகனம் மற்றும் பல்வேறு இருசக்கர வாகனங்களின் உதிரி பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட எதிரிகள் முருகன் மற்றும் தங்கபாண்டியன் ஆகிய இருவரும் விசாரணைக்குப் பின்னர். நேற்று (04.08.2023) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.