ரூ. 1.40 கோடி ஏப்பம் விட்ட 3 கேடிகள் கைது: சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

136

சென்னையில் தனியார் நிறுவன உரிமையாளரிடம் இருந்து ரூ. 1.40 கோடி பணம் பெற்று ஏமாற்றிய 3 கேடிகளை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

வீரமணி என்பவர் சென்னை ராமாபுரத்தில் சொந்தமாக “S.V.Tech Engg என்ற கம்பெனியை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 2021ம் ஆண்டு வீரமணிக்கு உறவினர்கள் மூலம் சென்னை அனகாபுத்தூரைச் சேர்ந்த ராஜேஷ், திருவண்ணாமலையைச் சேர்ந்த சுரேஷ்குமார், கீழ்க்கட்டளையைச் சேர்ந்த ரங்கராஜன் ஆகியோர் அறிமுகமானார்கள். வெளிநாட்டுக் கம்பெனியில் இருந்து கோவாவில் உள்ள ஒரு கம்பெனிக்கு RBI மூலமாக ரூ. 9,000 கோடி பணம் வரப்போவதாகவும், வீரமணியின் நிறுவனத்தை மேம்படுத்த ரூ. 5 கோடி வட்டியில்லாத கடனாக 5 வருடத்திற்கு தருவதாகவும் ஆசைவார்த்தைகள் கூறியுள்ளனர். அதனையடுத்து RBI வழங்கியது போன்ற போலியான ஆவணங்களை காண்பித்து நம்ப வைத்து புகார்தாரரிடமிருந்து ரூ. 1.40 கோடி வங்கி மூலமாக பெற்றுக்கொண்டு பணத்தை தராமல் ஏமாற்றியுள்ளனர். இது குறித்து, வீரமணி சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரிடம் புகார் அளித்தார்.

மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஷ்வரி மேற்பார்வையில், ஆவண மோசடி பிரிவில் II-ல் (ED F-III) வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். காவல் ஆய்வாளர் பாரதி தலைமையிலான தனிப்படையினர் இந்த வழக்கில் தொடர்புடைய அனகாபுத்தூர் ரங்கராஜன், 38, ராஜேஷ், 44, சுரேஷ்குமார், 48 ஆகிய மூவரையும் 31.08.2023 அன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூன்று குற்றவாளிகளும் விசாரணைக்குப் பின்னர் நேற்று (01.09.2023) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை காவல் குழுவினர் தேடி வருகின்றனர்.