ஆவடி காவல் ஆணையரகத்தில் ரவுடிகளின் சமூக விரோத செயல்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டி சிறப்பு தணிக்கை நடத்தும்படி ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் சிறப்பு உத்தரவிட்டார். அதனையடுத்து ஆவடி காவல் இணை ஆணையாளர் விஜயகுமார் மேற்பார்வையில், செங்குன்றம், அம்பத்தூர் துணை ஆணையாளர்களின் தலைமையில் ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் ரவுடிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதில் ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

அது தொடர்பாக ஆவடி காவல் ஆணையரகம் வெளியிட்டுள்ள பத்திரிகை குறிப்பில், ‘‘ஆவடி காவல் ஆணையரக தனிப்படையினர் கடந்த 1 மாதத்தில் நடத்திய சிறப்பு தணிக்கையில் கொலை, கொள்ளை, வழிப்பறி, கஞ்சா விற்பனை மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 258 ரவுடிகள் இதுவரை கைது செய்துள்ளனர், மேலும் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட 50 ரவுடிகள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் 208 ரவுடிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும், குற்ற விகிதத்தை குறைக்கவும் பாதுகாப்பு நடவடிக்கையின் கீழ் (Security Act) கைது செய்யப்பட்டனர். இவர்களில் வெள்ளவேடு காவல் நிலைய ரவுடியான ராஜேஷ்(33), த/பெ.மனோகரன், மேலமணல்மேடு மற்றும் எண்ணூர் காவல் நிலைய ரவுடியான ராஜேஷ்குமார் பாம் ராஜேஷ் (27) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். மேலும் 103 பேர் கொலை வழக்குகளில் சம்மந்தப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ரவுடிகளுக்கு எதிரான இந்த அதிரடி தொடர் கைது நடவடிக்கை தொடரும் என்றும், பொதுமக்களின் அமைதியான வாழ்க்கைக்கு அச்சுறுத்தும் வகையில் செயல்படும் ரவுடிகள் மீது தொடர்ந்து கடுமையான சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஆவடி காவல் ஆணையர் சங்கர் எச்சரித்துள்ளார்.