2,215 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தீயிலிட்டு அழிப்பு: * போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு போலீசார் நடவடிக்கை
தமிழகம் முழுவதும் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் இன்று தீயிலிட்டு எரித்து அழித்து போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

: போதை ஒழிப்பு நுண்ணறிவுப்பிரிவு போலீசாரால் 187 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2,215 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை தமிழ்நாடு குற்றம் புலனாய்வுப் பிரிவு ஐஜி செந்தில்குமாரி தீயிலிட்டு அழித்தார். அருகில் எஸ்பி மயில்வாகனன் உள்ளார்.
போதையில்லா தமிழ்நாடு என்ற முதல்வர் ஸ்டாலின் குறிக்கோளின் முயற்சியாக தமிழகம் முழுவதும் போதைப்பொருட்களின் கடத்தலை தமிழ்நாடு போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு போலீசார் தீவிரமாக கண்காணித்து அதனை தடுத்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரிய நெட்ஒர்க்காக செயல்பட்ட கீழக்கரை போதை ஆசாமிகளிடம் இருந்து ரூ. 6 கோடி மதிப்புள்ள கொக்கய்ன் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்து 8 பேர் கும்பலை கைது செய்தனர்.
இந்த வகையில் தமிழகம் முழுவதும் போதைப் பொருள் தடுப்பு நுண்ணிறிவுப் பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டும் போதை மற்றும் மனமயக்கும் பொருட்கள் நீதிமன்றம் உத்தரவின் பேரில் தீயிலிட்டு அழிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று (17.4.2025) 187 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 2215.71 கிலோ உலர் கஞ்சா, 58 கிலோ சாராஸ், 1 கிலோ ஹெராயின், 1.4 கிலோ கஞ்சா சாக்லெட் போன்ற போதைப்பொருட்கள் அனைத்து சட்ட முறைகளையும் பின்பற்றி செங்கல்பட்டு மாவட்டம் தென்மேல்பாக்கத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட எரிக்கும் ஆலையில் எரிக்கப்பட்டது.
இந்த ஆண்டில் இதுவரை 253 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 3628.71 கி.கி. உலர் கஞ்சா, 74.150 கிலோ ஹசிஷ், 58 கிலோ சாராஸ், 1 கிலோ ஹெராயின், 1.4 கிலோ கஞ்சா சாக்லெட்கள் போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவினரால் எரிக்கப்பட்டது. அமலாக்கம் குற்றப்புலனாய்வுப்பிரிவு கூடுதல் டிஜிபி அமல்ராஜ் உத்தரவின் பேரில், குற்றப்புலனாய்வுப் பிரிவு ஐஜி செந்தில்குமாரி, எஸ்பி மயில்வாகனன் மற்றும் சென்னை தடய அறிவியல் பிரிவு நிபுணர்கள் போதை மருந்துகள் மற்றும் மனமயக்கப் பொருள்களை அழிக்கும் செயல்முறையை கண்காணித்தனர்.
போதைப்பொருள்கள் மற்றும் போதைப்பொருள்களின் சட்டவிரோத விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான தகவல்களை கட்டணமில்லா தொலைபேசி உதவி எண். 10581 மூலம் மற்றும் வாட்ஸ்அப் எண். 9498410581 அல்லது மின்னஞ்சல் முகவரி spnibcid@gmail.com மூலம் பகிருமாறு தமிழ்நாடு போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.