அதிமுகவை மீட்க மாவட்டம் தோறும் செல்வோம்: ஓ.பன்னீர்செல்வம்

159

அதிமுக இயக்கத்தை மீட்டெடுப்பது தான் எங்கள் இலக்கு. இதற்காக மாவட்டந்தோறும் செல்வோம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் வரும் 26-ந் தேதி நடைபெறும் நிலையில், தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஓ.பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது பேசிய ஓ.பி.எஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியதாவது: ‘‘அண்ணா திமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு சிறுபிள்ளைத்தனமானது. ஒரு தேர்தல் என்பது வாக்காளர் பட்டியல் தொடங்கி பல்வேறு முறைகளில் தான் நடைபெற வேண்டும். அதிமுக மிகப்பெரிய மக்கள் இயக்கம். இந்த இயக்கத்தின் தேர்தல் சட்டவிதிகளின் படி தான் நடைபெற வேண்டும். இவை அனைத்தும் தேர்தல் ஆணையத்திலும், நீதிமன்றத்திலும் உள்ளது. விருப்பத்திற்கு ஏற்ப தேர்தல் நடத்துவது, சட்ட விதிகளை மாற்றுவது மாபெரும் இயக்கத்தை கொச்சைப்படுத்தும் செயல். இதை நாங்கள் கண்டிக்கிறோம். சட்ட ரீதியாக இதை எதிர்கொள்வோம். ஆனால், இது வேதனையாக உள்ளது. மாவட்டந்தோறும் அதிமுக தொண்டர்களை ஓபிஎஸ் சந்திக்க உள்ளார்” என அவர் தெரிவித்தார்.

அதனையடுத்து ஓ. பன்னீர்செல்வம் கூறியதாவது: “5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அண்ணா திமுக அமைப்பு தேர்தல் நடைபெறும். தேர்தல் நடத்துவதற்கு முன்பாக உறுப்பினர் படிவம் அளிக்க வேண்டும். அடையாள அட்டை வழங்க வேண்டும். இதை எல்லாம் முடித்த பிறகுதான் அண்ணா திமுகவின் உட்சபட்ச பதவிக்கு தேர்தல் நடைபெற வேண்டும். இவை எதுவும் செய்யாமல் பிக் பாக்கெட் அடிப்பது போன்று பதவியை பெற முயற்சிக்கிறார்கள். எதுவுமே முறைப்படி இல்லாமல் அண்ணா திமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படுகிறது. ஈரோடு கிழக்கில் அண்ணா திமுகவின் தோல்விக்கு காரணம் எடப்பாடி பழனிசாமி தான்.

அண்ணா திமுகவை மீட்கும் பணியை வேகமாக செய்வோம். சர்வாதிகாரமாக தேர்தல் அறிவிப்பை அறிவித்துள்ளார்கள். தொண்டர்கள் கலங்க வேண்டாம். எடப்பாடி பழனிசாமி அணி மீது அண்ணா தி.மு.க. தொண்டர்கள், மக்கள் நம்பிக்கை வைத்திருந்தால், இடைத்தேர்தலில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஈரோடு இடைத்தேர்தலுக்காக இரட்டை இலை சின்னத்தை விட்டுக்கொடுத்தோம். வேட்பாளர் வாபஸ் பெற்றோம். ஈரோடு இடைத்தேர்தல் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு எதிரானது. எங்களது பயணம் மக்கள் தீர்ப்பை எதிர்நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஈபிஎஸ் அணியிடம் இருந்து அண்ணா தி.மு.க. இயக்கத்தை மீட்டெடுப்பது தான் எங்கள் இலக்கு”. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கட்சியை இப்படிதான் நடத்தினார்களா?. சர்வாதிகாரமாக அண்ணா திமுக பொதுச்செயலாளர் தேர்தலை அறிவித்துள்ளனர். தமிழகத்தில் எங்கு சென்றாலும் ஈபிஎஸ்-க்கு எதிர்ப்பலை பாயும். வழக்கு நிலுவையில் இருக்கும்போது அண்ணா திமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த என்ன அவசரம். எங்களை கட்சியை விட்டு நீக்கும் தகுதி யாருக்கும் இல்லை.
ஏப்ரல் 2-வது வாரத்தில் திருச்சியில் மாபெரும் மாநாடு நடத்தப்படும். மாநாடு நடத்திய பிறகு மாவட்டந்தோறும் தொண்டர்களை சந்திக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.