மணிப்பூரில் பழங்குடியினரின் போராட்டத்தில் பயங்கரமான வன்முறை வெடித்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் 5 நாட்களுக்கு இன்டர்நெட் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதோடு 8 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பழங்குடியினத்தை சேர்ந்த மக்கள் அதிகம் வசிக்கின்றனர். பழங்குடியினத்தில் வெவ்வேறு பிரிவுகளை சேர்ந்த மக்கள் உள்ளனர். இந்நிலையில், மெய்டேய் என்ற சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் அங்கு உள்ளது. இதனால் அரசு இறுதி முடிவு எதுவும் எடுக்கவில்லை. இந்நிலையில் மெய்டேய் சமூகத்தை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து அனைத்து பழங்குடி மாணவர் சங்கத்தின் சவ்ராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள டோர்பங்க் பகுதியில் ஒற்றுமை ஊர்வலத்துக்கு அழைப்பு விடுத்தனர். இதையடுத்து இன்று ஒற்றுமை ஊர்வலம் நடந்தது. அப்போது திடீரென்று மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. சாலையில் டயர்களை தீயிட்டு எரித்ததோடு, கடைகள், வீடுகளுக்கும் தீவைக்கப்பட்டது. உடனடியாக போலீசார் தடியடி நடத்தினர்.
மேலும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி ஊர்வலத்தில் பங்கேற்றவர்களை கலைத்தனர். பல மாவட்டங்களுக்கு இந்த வன்முறை பரவியது. இதனால் போராட்டங்கள் வெடித்ததோடு, கடைகளை மூட கட்டாய உத்தரவிடப் பட்டது. இதனால் பல இடங்களில் பதட்டம் நிலவி வருகிறது. இந்நிலையில் பதட்டத்தை குறைக்கும் வகையில் மாநில அரசு மாநிலம் முழுவதும் 5 நாட்களுக்கு இன்டர்நெட் சேவையை ரத்து செய்துள்ளது. மேலும் 8 மாவட்டங்களில் ஊரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மணிப்பூர் தலைநகர் இம்பாலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் இன்று மணிப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.