தமிழக அரசு போதைப் பொருட்களின் நுகர்வு மற்றும் சட்ட விரோத கடத்தலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறது. கடந்த 10.08.2022 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் பங்கு பெற்ற போதைப்பொருள் தடுப்பு மாநாடு நடத்தப்பட்டது.
முதல்வர் ஸ்டாலின் உத்தரவை அமல் படுத்திய அமலாக்கப்பிரிவு
தமிழக முதல்வர் ஸ்டாலின் போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அவர்களின் அசையும் அசையா சொத்துக்களை சட்ட ரீதியாக முடக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்க உத்திரவிட்டார். கல்வி நிறுவனங்களுக்கு அருகாமையில் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை முழுமையாக தடை செய்யப்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அந்த உத்தரவில் கூறியிருந்தார்.
74 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்ட உலக சாதனை காணொலி
அதனைத் தொடர்ந்து கடந்த 11.08.2022 அன்று அமலாக்கப் பணியகம், குற்றப் புலனாய்வு துறையினால் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த சுமார் 74 லட்சம் மாணவர்கள் காணொளி மூலம் கலந்து கொண்ட மாநில அளவிலான போதைப் பொருட்களுக்கு எதிரான ‘Drive Against Drugs (DAD)” மாபெரும் உறுதி மொழி விழா ‘எனக்கு வேண்டாம்’ மாண்புமிகு வேண்டாம்’ என தமிழக முதல்வர் ஸ்டாலினால் வழி நடத்தப்பட்டது. இவ்விழா உலக சாதனை அமைப்பால் தணிக்கை செய்யப்பட்டு உலக சாதனையாக அறிவிக்கப்பட்டது.
20 நிமிட குறும்படம்
போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வினை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே ஏற்படுத்த பல்துறை பிரபலங்களின் பங்களிப்புடன் 20 நிமிடம் ஓடும் விழிப்புணர்வு குறும்படம் தயாரிக்கப்பட்டு தமிழக முதல்வரால் வெளியிடப்பட்டது. விழிப்புணர்வு குறும்படம் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இணைய வழியில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் அமலாக்கப் பணியகம், குற்றப் புலனாய்வு துறையின் முன்னெடுப்பினால் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் சுமார் 14000 போதைக்கு எதிரான மாணவர் குழுக்கள் (Anti Drug Clubs) உருவாக்கப்பட்டுள்ளது. என்.எஸ்.எஸ் / என்.சி.சி மற்றும் இதர மாணவர்கள் இயக்கங்களின் மூலம் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தினை தொடர்ச்சியாக மேற்கொள்ள சிறப்பு தன்னார்வலர் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
சிலம்பாட்டம் மூலம் உலக சாதனை
தன்னார்வலர்கள் மூலம் பொது மக்களுக்கு போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 24.06.2023 அன்று, சென்னை, ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் சிலம்பாட்ட கலைஞர்கள் சுமார் 1,600 பேர் 10 நிமிடங்களில் சுமார் 9.50 லட்சம் வகையான சிலம்பாட்ட இயக்கங்களை செய்து காட்டி பொதுமக்களிடம் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வினை ஏற்படுத்தினர். மேற்படி நிகழ்வு உலக சாதனை அமைப்பால் தணிக்கை செய்யப்பட்டு ‘உலக சாதனையாக’ அறிவிக்கப்பட்டது.
உதயநிதியிடம் ஒப்படைக்கப்பட்ட சான்றிதழ்
World Record Union-ஆல் வழங்கப்படும் இந்த உலக சாதனைக்கான சான்றிதழ் தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் வழங்கப்பட்டு, அவர் அச்சான்றிதழை அமலாக்கப்பிரிவு ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால் ஒப்படைத்தார்.