சென்னைப் பெருநகர காவல்துறை ஆணையராக கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்த சங்கர்ஜிவால் தமிழக காவல்துறையின் மிக உச்சப்பதவியான சட்டம், ஒழுங்கு டிஜிபி பதவியை எட்டியுள்ளார். வடமாநிலத்தவராக இருந்தாலும் சங்கர்ஜிவாலின் அழகிய தமிழ் அனைவரையும் கவரும். ஆங்கிலத்தை விட தமிழில் பேசுவதையே விருப்பமாக கொண்ட சங்கர் ஜிவால் உண்மையிலேயே சிறந்த தமிழ் மகனாகவே தமிழ்நாட்டில் தனது மெச்சத்தகுந்த காவல் பணியில் சிறந்து விளங்கி வருகிறார்.
நம்ம தமிழ்நாட்டு புதிய டிஜிபி சங்கர்ஜிவால் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க,,,
58 வயது நிறைந்த சங்கர்ஜிவால் பிறந்து வளர்ந்தது உத்தரகாண்ட் மாநிலத்தில் அல்மோரா என்ற ஊர். ஜிவால் பொறியியல் பிரிவில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்தவர். பின்னர் PGDM – Management மற்றும் MS ஆராய்ச்சி படித்து முதுகலைப் பட்டம் பெற்றார். தமிழ், ஆங்கிலம் மற்றுமின்றி உத்திரகாண்டின் தாய்மொழியான குமானி மொழியில் சங்கர்ஜிவால் புலமை பெற்றவர். படிப்பு முடிந்ததும் சில ஆண்டுகள் செய்ல் (SAIL – ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா), பெல் (BHEL) – பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ்) நிறுவனத்திலும் இன்ஜினியராக பணிபுரிந்தவர். அதன் பின்பு காவல் பணியில் ஆர்வம் மேலோங்க ஐபிஎஸ் தேர்வு எழுதி அதில் வெற்றியும் பெற்று ஐபிஎஸ்சில் தேர்வானார்.
1990ம் ஆண்டு பேட்ச் தமிழக கேடர் ஐ.பி.எஸ் அதிகாரியான சங்கர் ஜிவால் 1993ம் ஆண்டு மன்னார்குடி சப் டிவிஷன் ஏஎஸ்.பியாக தனது காவல் பணியைத் தொடங்கினார். அதன் பின்பு 1994 ம் ஆண்டு சேலம் ரூரல் பகுதி ஏஎஸ்.பியாக பணிபுரிந்தார். அதற்குப் பிறகு 1995ம் ஆண்டு பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினார். அதன் பின்பு 2000-ம் ஆண்டு மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி) தென்மண்டல இயக்குநராக பொறுப்பேற்று அங்கேயே டிஐஜி ஆனார். 2004ம் ஆண்டு போதைப்பொருள் கடத்துபவர்கள் பெருமளவில் கைது செய்யப்பட்டு, ஹெராயின் கடத்தலை கட்டுப்படுத்துவதில் மிகச் சிறந்த பெருமைக்குரியவராக திகழ்ந்தார்.
2006ம் ஆண்டு திருச்சி போலீஸ் கமிஷனரான சங்கர்ஜிவால் இ-சலான்கள், ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை அமைப்பு மற்றும் பூட்டிய வீடுகளை எஸ்எம்எஸ் மூலம் கண்காணித்தல் ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார். 2008ம் ஆண்டு ஐ.ஜியாக பதவி உயர்வு பெற்று 2011ம் ஆண்டு வரை தமிழக உளவுத்துறை ஐ.ஜியாக பணியாற்றினார். இந்த காலகட்டங்களில் தமிழகத்தின் உள்நாட்டு பாதுகாப்பு, ஒருங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவை நிறுவுவது, மாநிலத்தின் புலனாய்வுப் பிரிவுகளின் தொழில்நுட்ப கண்காணிப்புத் திறனை நவீனமயமாக்கினார்.
அதன் பின்னர், சத்தியமங்கலம் வனத்துறையில் 6 ஆண்டுகளாக சிறப்பு அதிரடிப்படை(STF) தலைவராக இருந்த போது வனப்பகுதிகள் வழியாக அந்நிய சக்திகள் ஊடுறுவல், கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்ட விரோத சக்திகளை முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டன. 2015ம் ஆண்டு ஏடிஜிபியாக பதவி உயர்ந்தார்.
2021ம் ஆண்டு சென்னை நகர போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்றார். பின்பு டிஜிபியாக பதவி உயர்ந்து சென்னை நகர கமிஷனராக தொடர்ந்தார்.
சென்னை நகர போலீஸ் கமிஷனராக அவர் பணியாற்றிய 2 ஆண்டுகளில் சென்னை நகரில் பல போக்குவரத்து சீர்திருத்த நலத்திட்டங்கள் செய்தது மட்டுமின்றி உலகப் புகழ்பெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு மிகச்சிறப்பான பாதுகாப்பு வழங்கி சிறு பாதுகாப்பு குறைகளும் இல்லாமல் நடத்திக்காட்டி முதல்வர் ஸ்டாலினிடம் பாராட்டுகளை பெற்றார். சங்கர்ஜிவால் 2017 மற்றும் 2019ம் ஆண்டுகளில் இரு முறை ஜனாதிபதி விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.