நட்சத்திர காவல் விருது பெற்ற பெண் முதல்நிலை காவலர்: கமிஷனர் சங்கர்ஜிவால் பாராட்டு

162

கடந்த மே மாதம் நட்சத்திர காவல் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மடிப்பாக்கம் காவல் நிலைய முதல்நிலை பெண் காவலரை கமிஷனர் சங்கர்ஜிவால் நேரில் அழைத்து நட்சத்திர காவல் விருதுக்கான பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

சென்னை பெருநகர காவல் துறையில் சிறப்பாக பணியாற்றும் காவல் ஆளிநர்களுக்கு அவர்களது நற்பணியை பாராட்டும் விதமாக அவ்வப்போது பாராட்டு சான்றிதழ்களுடன் உரிய வெகுமதியும் வழங்கப்பட்டு வருகிறது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், தலைமையிட கூடுதல் காவல் ஆணையாளர் லோகநாதன் தலைமையிலான குழு ஒவ்வொரு மாதமும் தீவிரமாக ஆராய்ந்து, சென்னை பெருநகர காவல் துறையில் சிறப்பாகவும் மெச்சத்தக்கவகையிலும் பணி செய்யும் காவல் அதிகாரி அல்லது ஆளிநரை கண்டறிந்து அவர்களது சிறப்பான பணியினை மதிப்பிட்டு “மாதத்தின் நட்சத்திர காவல் விருது” (Police Star of The Month) பெறுவதற்கு தேர்ந்தெடுத்து வருகின்றனர்.

ஒவ்வொரு மாதமும் நட்சத்திர காவலர் விருதுக்கு தேர்வு செய்யப்படும் காவல் அலுவலருக்கு ரூ. 5,000 பண வெகுமதியுடன் தனிப்பட்ட செயல் திறன் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் கடந்த மே-2023 மாதத்தின் நட்சத்திர காவல் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட S-7 மடிப்பாக்கம் காவல் நிலைய முதல்நிலை பெண் காவலர் குமாரி (மு.நி.பெ.கா.38303) என்பவரை நேற்று (23.06.2023) நேரில் அழைத்து மே மாத நட்சத்திர காவல் விருதுக்குரிய பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி ரூ. 5,000- வழங்கி பாராட்டினார்.

18.02.2018 அன்று ராஜா என்பவர் தான் வாணுவம்பேட்டையில் நடத்தி வந்த பாலாஜி ரத்த பரிசோதனை நிலையத்தில் வேலை செய்து வந்த யமுனா என்பவர் மீது ஸ்பிரிட் என்ற அமிலத்தை ஊற்றி தீ வைத்து கொளுத்தி கொலை செய்தது தொடர்பாக S-7 மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் கொலை பிரிவில் வழக்குப் பதிவு செய்து, எதிரி ராஜா கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.

இவ்வழக்கு தொடர்பாக, செங்கல்பட்டு, மஹிலா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், முதல்நிலை பெண் காவலர் குமாரி வழக்கு நடவடிக்கைகள், வழக்கு ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களை தொடர்ச்சியாக கண்காணித்து நீதிமன்ற பணியில் முழுக்கவனம் செலுத்தி வந்த நிலையில், 04.05.2023 அன்று எதிரி ராஜாவுக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.30,000 -அபராதம், விதித்து கனம் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.