“சிறைகளில் கலை” என்ற திட்டம் புழல் மத்திய சிறையில் துவக்கம்

119

சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறையின் நோக்கம், சிறைவாசிகளை பாதுகாப்பது மட்டுமின்றி அவர்களை சீர்திருத்தி மறுவாழ்வளித்து விடுதலைக்கு பின் சமூகத்தில் பயனுள்ள குடிமக்களாக இணைப்பதன் மூலம் அவர்கள் மீண்டும் குற்றம் இழைத்து சிறைப்படுதலை தடுப்பது ஆகும். இந்த நோக்கத்தை செயல்படுத்தும் வகையில், தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை பல்வேறு புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சிறைத்துறையால் எடுக்கப்பட்ட இதுபோன்ற மற்றொரு முயற்சியில், “சிறைகளில் கலை” என்ற புதிய திட்டத்தின் மூலம் சிறைவாசிகளின் மன அழுத்தத்தைக் குறைக்கவும், அவர்களை சீர்திருத்தம் செய்யும் ஒரு புதிய திட்டம் ஆகும்.

“சிறைகளில் கலை” என்ற திட்டத்தின் துவக்க விழா புழல், மத்திய சிறை-1ல் இன்று (26.06.2023) மாண்புமிகு சட்டம், நீதி, சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை அமைச்சர் திரு.S.ரகுபதி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இத்திட்டம் மற்ற மத்திய சிறைகளில் விரைவில் செயல்படுத்தப்படும்.

சிறைகளில் கலை என்ற திட்டத்தில் டெல்லி தேசிய சட்டப்பல்கலைக் கழகம் மற்றும் சுமனசா அறக்கட்டளையும் இணைந்து சிறைவாசிகளுக்கு ஆழ்நிலை தியானம், யோகா, இசை, நாடகம், இலக்கியம் மற்றும் விளையாட்டு போன்ற பயிற்சிகளை வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்பும் சிறைவாசிகளுக்கு மேற்படி பயிற்சியுடன் 6 மாத கால பட்டய படிப்பும் சான்றிதழும் வழங்கப்படும்.

இத்திட்டத்தின் துவக்க விழா சுமனசா அறக்கட்டளை நிறுவனத்தின் நடனக்கலை கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் புழல், மத்திய சிறை-1ன் 700 சிறைவாசிகளின் மத்தியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.சுதர்சனம் அவர்கள், தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை தலைமை இயக்குநர் அமரேஷ் புஜாரி, சென்னை சுமனசா அறக்கட்டளை நிறுவனர் கிருஷ்ணா, சிறைத்துறைத் துணைத்தலைவர் (தலைமையிடம்) கனகராஜ், சென்னை சரக சிறைத்துறைத் துணைத்தலைவர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை புழல், மத்திய சிறை-2 கண்காணிப்பாளர் திரு.இரா.கிருஷ்ணராஜ் மற்றும் அலுவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.