அடைக்கல மாதா ஆலயத்தில் பொங்கல் விழா! இதுதான் தமிழர்களின் உண்மையான அடையாளம்! நீதிபதி அ. முகமது ஜியாவுதீன் பேச்சு!

231

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை ஒன்றியம், தொத்தார் கோட்டை என்ற திருவிடை மிதியூர் கிராமத்தில் 16.1.2024 செவ்வாய்க்கிழமை “பொங்கல் விழா” மிக சிறப்பாக நடைபெற்றது. திருவடிமிதியூர் கிராமத்தைச் சார்ந்த பொதுமக்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். மேனாள் மாவட்ட நீதிபதியும், தமிழ்நாடு மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையத்தின் முழு நேர உறுப்பினருமான நீதிபதி அ. முகமது ஜியாவுதீன், மற்றும் கோவை மார்ட்டின் குழுமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஜான் கென்னடி ஆகியோர் சிறப்பு விருந்துனர்களாக கலந்து கொண்டார்கள்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கோவையைச் சார்ந்த தொழிலதிபர்கள் சூசை மாணிக்கம், ராஜா, ஆகியோரும் கோவை ஜென்னீஸ் ரெசிடென்சி சேவியரும் கலந்து கொண்டார்கள். விழாவில் கலந்து கொண்டு நீதிபதி அ. முகமது ஜியாவுதீன் பேசும் போது கோயமுத்தூரில் மிகச்சிறந்த தொழிலதிபர்களாக விளங்கும் ஜான் கென்னடி, சூசை மாணிக்கம், ராஜா, ஆகியோர் நீண்ட தூரம் பயணம் செய்து தங்கள் சொந்த கிராமத்தில் உறவுகளோடு பொங்கல் கொண்டாடுவதற்காக வருகை தந்திருக்கிறார்கள். இதைப் பார்க்கும் போது “நாட்டுக்கு தலைநகர் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் உனக்கு தலைநகர் உனது கிராமம் தான்” என்ற கவிஞர் வைரமுத்து அவர்களின் கவிதை நினைவுக்கு வருகிறது.

வேறு வேறு மத நம்பிக்கை கொண்டவர்கள் இருக்கிறார்கள். தீபாவளி, கிறிஸ்மஸ், ரம்ஜான் போன்ற மதம் சார்ந்த பண்டிகைகள் உண்டு. ஆனால் மதவேறுபாடுகளை கடந்து எல்லா தமிழர்களும் கொண்டாட வேண்டிய தமிழ் தேசிய இனத்தின் தனிப்பெரும் அடையாளமாக விளங்கும் ஒரே பண்டிகை அல்லது திருவிழா என்றால் அது பொங்கல் மட்டும்தான். இன்றைக்கு காலையிலிருந்து எவ்வித மதச்சடங்குகளும் இன்றி அடைக்கல மாதா தேவாலயத்தில் பொங்கல் விழா நடைபெற்று வருகிறது. இந்த கிராமத்தில் உள்ள எல்லோரும் சேர்ந்து அடைக்கலமாக தேவாலயத்தில் பொங்கல் விழா கொண்டாடுவதும் அதற்கு முகமது ஜியாவுதீன் ஆகிய என்னை சிறப்பு விருந்தினராக அழைப்பதும் தான் நமது நாட்டின் பன்முகத்தன்மையின் அடையாளம். இந்த சமய ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் நாம் காப்பாற்ற வேண்டும். இது சின்ன கிராமத்தில் நடக்கிற விழாவாக இருந்தாலும் இந்தியாவுக்கே வழி காட்டக்கூடிய வகையில் சமத்துவப் பொங்கலாக நடந்திருக்கிறது. இந்த ஒற்றுமையும் மனித நேயமும் தான் தமிழர்களின் அடையாளம். தமிழ்நாட்டில் முதல் ஏழு வள்ளல்கள், இடையேழு வள்ளல்கள், கடையேழு வள்ளல்கள், என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் வாரி கொடுத்த வள்ளல்களின் வரலாற்றை தமிழ் இலக்கியங்கள் பதிவு செய்திருக்கிறது. ஒவ்வொரு மனிதரும் தன்னால் இயன்ற உதவிகளை தன் கிராமத்திற்கும் சக மனிதர்களுக்கும் செய்ய வேண்டும் என்கிற பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் மட்டுமல்ல கலந்து கொண்ட அனைவருக்குமே பரிசு வழங்கப்பட்டுள்ளது. போட்டியில் கலந்து கொள்ளுகிற வழக்கத்தை இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். வெற்றி பெறுவது மட்டுமல்ல போட்டிகளில் பங்கெடுத்துக் கொள்கிற மனப்பான்மையே வெற்றியின் முதற்படி என்பதை இளைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள் இந்த கிராமத்தில் இருக்கிற அனைவருக்கும் வருகிற புத்தாண்டு ஒளிமயமான ஆண்டாக அமைந்து சிறப்பான வாழ்வு அமைய தமிழர்களின் புத்தாண்டு தொடக்கமான பொங்கல் திருநாளில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார்.

முன்னதாக திருவடிமிதியூர் மற்றும் அருகில் உள்ள கிராமத்தைச் சார்ந்த நாட்டு மாடுகளின் அணிவகுப்பு நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மாடுகளின் உரிமையாளர்களுக்கு ஜான் கென்னடி தமிழ் முறைப்படி தாம்பாளத் தட்டில் பரிசுகள் வழங்கினார். அதை தொடர்ந்து சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்ட ஓட்டப்பந்தயம், இசை சுற்று, சிறிய பாட்டிலில் கையால் தண்ணீர் நிரப்புதல், கயிறு இழுத்தல், உறி அடித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளை தமிழ்நாடு காவல்துறையில் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் மாணிக்கம் முறைப்படுத்தி நடத்தினார்.

இந்த விழாவில் திருவடிமிதியூர் கிராமத்தைச் சார்ந்த ராசையா, பழனி, உயர் நீதிமன்ற வழக்கறிஞர் இளங்கோ, ஜோசப், ரவி , மருது, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.