சென்னை நகர காவல்துறையில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தபடி குரூப்ஒன் தேர்வு எழுதி பாஸ் ஆகி டிஎஸ்பியாக பணி நியமன ஆணை பெற்ற ஆய்வாளர் ராமலிங்கத்தை கமிஷனர் அருண் நேரில் அழைத்து பாராட்டினார்.
சென்னை நகர காவல், நவீன காவல் கட்டுப்பாட்டு அறையில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் ராமலிங்கம். 2011 ஆம் ஆண்டு நேரடி காவல் உதவி ஆய்வாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, நாகப்பட்டினம் மாவட்டம், சென்னை அம்பத்தூர், மத்தியக் குற்றப்பிரிவு, நவீன காவல் கட்டுப்பாட்டு அறை பிரிவுகளில் பணிபுரிந்து 2025ம் ஆண்டு காவல் ஆய்வாளராக பதவி உயர் பெற்றார். இந்நிலையில் துறை அனுமதியுடன் கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வில் கலந்து கொண்டு, தேர்வில் வெற்றி பெற்று 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டிஎஸ்பி பதவிக்கு தேர்வு பெற்று பணி நியமன ஆணை பெற்றுள்ளார்.
காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து கொண்டு, தொடர்ச்சியாக ஊக்கத்துடன் பல்வேறு உயர் பதவிகளுக்கான அரசு தேர்வுகளில் பலமுறை கலந்து கொண்டவர் ராமலிங்கம், தனது அயராத உழைப்பால் தமிழக காவல்துறையில் டிஎஸ்பி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது பெருமை சேர்த்துள்ளது. 07.09.2025 முதல் டிஎஸ்பி பணிக்கான பயிற்சிக்கு செல்ல உள்ளார். அவரது திறமையை மெச்சிய சென்னை நகர போலீஸ் கமிஷனர் அருண், இன்று ராமலிங்கத்தை தனது அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் நுண்ணறிவுப்பிரிவு துணை ஆணையர் ராமமூர்த்தி உடனிருந்தார்.