சென்னை நகர காவல்துறை சார்பாக போக்குவரத்து போலீசார் கூடுதல் ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் பொது மக்களுக்கு சாலை விழிப்புணர்வை ஏற்படுத்தி பொதுமக்களுடன் கலந்துரையாடினர்.

செப்டம்பர் 6 காவலர் தினத்தை முன்னிட்டு இன்று (7.9.25) காலை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள புனித ஜார்ஜ் பள்ளி முன்பாகவும் காமராஜர் சாலை பகுதிகளில் போக்குவரத்து போலீசார் இருசக்கர வாகனங்களில் பேரணியாக சென்று பொதுமக்களுக்கு போக்குவரத்து விதிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் போக்குவரத்துக் காவல் துறையினரின் நலனை கருதி புனித ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் 200-க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசாருக்கு மருத்துவ பரிசோதனை செய்து உரிய மருத்துவ ஆலோசனைகள் மருத்துவர்களால் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சென்னை நகர போக்குவரத்து கூடுதல் ஆணையர் கார்த்திகேயன், போக்குவரத்து கிழக்கு துணைக் கமிஷனர் மெகலினா ஐடென் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.