‘காவல்துறை எங்கள் நண்பன்’ என்று பொதுமக்கள் சொல்லும் வகையில் செயல்பட வேண்டும்: போலீஸ் உயர் அதிகாரிகள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

129

‘காவல்துறை எங்கள் நண்பன்’ என்று பொதுமக்கள் சொல்லும் அளவுக்கு நடந்துகொள்ள வேண்டும் என்று போலீஸ் உயர் அதிகாரிகள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

‘‘கள ஆய்வில் முதலமைச்சர்’’ திட்டத்தின் கீழ், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களின் காவல் துறை உயர் அலுவலர்களுடன் சட்டம்-ஒழுங்கு தொடர்பான ஆய்வுக்கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், தலைமைச்செயலாளர் வெ. இறையன்பு, சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு, கூடுதல் டி.ஜி.பி. சங்கர், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் சி.பழனி, கடலூர் மாவட்ட கலெக்டர் கி.பால சுப்ரமணியம், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் டாக்டர் ஷ்ரவன் குமார் ஜடாவத், வடக்கு மண்டல ஐ.ஜி. டாக்டர் என். கண்ணன், விழுப்புரம் சரகம் டி.ஐ.ஜி. பகலவன், விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா, கடலூர் மாவட்ட எஸ்பி ராஜாராம், கள்ளக்குறிச்சி எஸ்பி மோகன்ராஜ், காவல்துறை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:-

ஒரு மாநிலத்தின் நீண்ட கால வளர்ச்சிக்கு பலகாரணிகள் இருந்தாலும், அங்கு நிலவும் சட்டம்- ஒழுங்கு தான் அவற்றில் மிக முக்கியமானதாக அமைகிறது. அமைதியான மாநிலத்தில் சமூக பொருளாதார வளர்ச்சிகள் தொய்வுகளின்றி ஏற்படும். இன்றைய தினம் தமிழ்நாட்டிற்கு பல்வேறு விதமான புதிய தொழில் முதலீடுகள் எல்லாம் வந்து கொண்டிருக்கிறது. இதற்கு என்ன காரணம் கேட்டீர்களா னால், அதற்கு நமது மாநிலம் அமைதியாக இருக்கிறது, சட்டம் – ஒழுங்கு முறையாக பராமரிக்கப்படு கின்றது என்பது தான் அர்த்தம். அதற்கு நீங்களெல்லாம் அடித்தளமாக இருந்து கொண்டிருக்கிறீர்கள்.

அதே நேரத்தில் சில சமயங்களில் சிறுபிரச்சினைகள் கூட ஆரம்ப கட்டத்தில் சரியான நடவடிக்கை எடுக்கப்படா விட்டால், அதுவே பின்னர் பெரிய பிரச்சினையாக போய்விடு கிறது. அந்தப் பிரச்சினைகள் குறித்த செய்திகள் மிக வேகமாக பரவி விடுகிறது. எனவே, சிறு சம்பவம் கூட கவனமாக கண்காணிக்கப்பட வேண்டும் என்பதில் தான் நீங்களெல்லாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

குற்ற நிகழ்வுகளை பொறுத்தவரை, மாவட்ட காவல்துறைக்கு கியூ பிராஞ்ச் உளவுத்துறை, சமூக ஊடகங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றின் மூலம் பெறப்படும் தகவல்களை சேர்த்து கூர்மையாக ஆய்வு செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன். குற்றச் சம்பவம் நடக்காமல் தடுக்க இது பெரிதும் உதவும் என்று நான் சொல்லி வருகிறேன். இவ்வாறு, முன்கூட்டியே நீங்கள் மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் மூலமாக பல குற்றச் சம்பவங்கள் நடக்காமல் தவிர்க்க முடியும். தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில், சாதி, மத மோதல்கள், கூட்டு வன்முறைகள், திட்டமிட்ட கலவரங்கள் ஆகியவை சமீபகாலங்களில் நிகழவில்லை.

இந்த நிலை தொடரும் வகையில் நீங்கள் ரோந்துப் பணிகளை பரவலாக்க வேண்டும். உயர் அலுவலர்கள் களப்பணியில் காணப்பட வேண்டும். அப்போதுதான் சார்நிலை அலுவலர்கள் மேலும், கவனமுடன் உற்சாகத்துடன் பணியாற்றுவார்கள். இளைஞர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமை யாகாமல் தடுக்க வேண்டியது காவல்துறையின் கடமை. இதில், மாவட்ட கலெக்டர் களின் பங்கும் முக்கியமானது. பள்ளிகள் மற்றும் கல்லூரி களின் நிர்வாகிகளுடன் தொடர்பில் இருங்கள். அவர்களிடம் விவரங்கள், புகார்கள் இருக்கலாம். அவற்றை நீங்கள் அறிய வேண்டும். மாணவர்களிடம் விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

போதைப்பொருட்களை பொறுத்த வரை, மிகமிக கடுமையான நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்பட வேண்டும். இது தமிழ்நாட்டின் எதிர்காலம் சம்பந்தப்பட்டது என்பதை நீங்கள் உணர வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு மிகமிக முக்கியமானதாகும். இவர்களது பாதுகாப்பிற்கு காவல் துறை முழுமையாக பொறுப்பேற்க வேண்டும். இவர்கள் மீதான குற்றங்களில் காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவற்றில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். அதேபோல், காவல் நிலையங்களுக்கு வருபவர்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும். பொதுமக்கள் பயமின்றி புகார் அளிக்கும் வகையில் உங்கள் காவல் நிலையங்கள் செயல்பட வேண்டும். ‘காவல்துறை உங்களின் நண்பன்’ என்ற வாசகத்தை நாம் சொல்லாமல், ‘காவல்துறை எங்கள் நண்பன்’ என்று பொதுமக்கள் சொல்லும் அளவிற்கு நாம் நடந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.