இன்று ஜூலை 17
சர்வதேச நீதி நாள்.
இந்த நாளில்தான், ரோமில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. 1998 ஆம் ஆண்டு ஏற்பட்ட இதற்கான உடன்படிக்கையில் 120 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. ஈராக், லிபியா, இஸ்ரேல், கத்தார், ஏமன், சீன மக்கள் குடியரசு, மற்றும் அமெரிக்கா உட்பட்ட 7 நாடுகளும் இதற்கு எதிராக, வாக்களித்தன. சர்வதேச அளவிலான குற்றங்களுக்கு அந்த நாடுகள் உரிய நடவடிக்கை எடுக்க முடியாத நிலையிலோ, அல்லது நடவடிக்கை எடுக்க விரும்பாத பட்சத்திலோ ரோமில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றமே அதுக்கான நீதிபரிபாலனையை செய்யும் என்பதே இதன் அடிப்படை.
உலகின் பல்வேறு நாடுகளில் மதம் மற்றும் இனத்தின் அடிப்படையில் ஏற்படும் வன்முறை சம்பவங்களில் அநீதி தலை தூக்குவதும், அரசு ஆதரவோடு குற்றவாளிகள் தப்பிவிடுவதும் தவிர்க்க முடியாததாக உள்ளது. ஆனால், அநீதியை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை உலகம் எதிர்பார்க்கிறது.
ஆனால், நடைமுறையில் அந்த எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாகவே உள்ளன என்பதே எதார்த்தம். ஆம், போராளிகளையும் அப்பாவி பொது மக்களையும் சர்வதேச போர் முறைகளுக்கு எதிராக கொடூரமாக கொலை செய்த ராஜபக்சே போன்றவர்களை விசாரிக்க முடியாத நிலையில் ஏமாற்றம் என்பது எதார்த்தமே!
பெண்களுக்கு எதிரான கொடுமைகள், ஒரு நாட்டுக்குள் நடக்கும் இனப்படுகொலைகள், நாடுகளுக்கு இடையிலான பயங்கரவாதம் போன்ற பிரச்சனைகளை தீர்க்க வழிகாணும் வகையில் சர்வ தேச நீதி நாள் சிந்தனைகளை உருவாக்கட்டும். நீதியை நிலைநாட்டப் பட்டால் மட்டுமே நீதிமன்றங்களின்மீது நம்பிக்கை இருக்கும். ஏழைகளுக்கும்; எளியவர்க்கும்; அகதிகளுக்கும்; ஆண்களுக்கு சமமாக பெண்களுக்கும்; அடக்குமுறை இல்லாமல் அனைவருக்கும்; உலக அளவில் நீதி கிடைக்கும் என்ற நம்புக்கையை இந்த சர்வதேச நீதி நாள் வழங்கட்டும்.
அ. முகமது ஜியாவுதீன்
(மேனாள் மாவட்ட அமர்வு நீதிபதி)
முழுநேர உறுப்பினர், மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையம்
தமிழ்நாடு.