வந்தே பாரத் ரெயிலில் மாணவர்களுடன் மோடி கலந்துரையாடல்

168

சென்னை சென்டிரல் ரெயில்நிலையத்தில் கோவை செல்லும் வந்தே பாரத் ரெயிலை பிரதமர் நரேந்திரமோடி நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் ரெயிலில் ஏறி அதில் பயணம் செய்த பள்ளி மாணவர் பிரசன்னா மற்றும் மாணவி சூர்யா ஆகியோருடன் ரெயில் வசதிகள் குறித்தும், அனுபவம் குறித்தும் கலந்துரையாடினார். இதுகுறித்து அந்த மாணவர்கள் கூறுகையில், ‘எங்களுடைய பெயர் என்ன என்றும், நன்றாக படிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி எங்களிடம் கூறினார். எங்களுக்கு இது மிகவும் உற்சாகமாக இருந்தது. பிரதமரை நேரில் வந்து பேசியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதேபோல, வந்தே பாரத் ரெயிலில் முதல் முறை பயணம் செய்கிறோம். ரொம்பவும் சந்தோசமாக இருக்கிறது’ என்றனர்.

இதேபோல, சென்னை ஐ.ஐ.டி. மாணவர்களை சந்தித்து அவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். அவர்களிடம், 5ஜி தொழில்நுட்பம் குறித்தும், ரெயில்வே துறையிலும் மாணவர்கள் செய்து வரும் ‘பிராஜெக்டுகள்’ குறித்தும் கேட்டறிந்தார்.

மொத்தம் 8 ரெயில் பெட்டிகள் கொண்ட இந்த ரெயிலில் 7 பெட்டிகள் சாதாரண ஏ.சி. கொண்டதாகவும், 1 பெட்டி 360 டிகிரியில் சுழலும் இருக்கைகள் கொண்டதாகவும் அமைந்துள்ளன. மொத்தம் 596 இருக்கைகள் கொண்ட இந்த ரெயிலில் ஒவ்வொரு இருக்கையும் சொகுசாக உட்காரும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தன.

ஒவ்வொரு பெட்டியிலும், அவசர உதவிக்கு என்ஜின் பைலட்டுடன் தொடர்பு கொள்ள ‘டாக்பேக்’ வசதி, உணவுகளை பதப்படுத்தி வைக்க ‘மினி பேன்டிரி’, வெஸ்டன் கழிவறை, இந்திய கழிவறை என 2 வகையான கழிப்பறைகள், அவசர தேவைக்கு வண்டியை நிறுத்த ‘எமர்ஜன்சி பட்டன்கள்’, ஒவ்வொருவரின் இருக்கைக்கும் கீழ் செல்போன் சார்ஜ் செய்யும் வசதிகள், தீ விபத்தை எச்சரிக்கும் அலாரம், முதலுதவி பெட்டகம், தானியங்கி கதவை அவசர நேரத்தில் திறக்கும் வசதிகள், இலவச ‘வை-பை’ வசதி, கண்காணிப்பு கேமரா வசதி ஆகியவை இடம்பெற்றிருந்தது.

இந்த அதிவேக சிறப்பு ரெயில் சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய 3 ரெயில் நிலையங்களில் 2 முதல் 3 நிமிடங்கள் வரை மட்டுமே நின்று செல்லும். இடையில் எந்த இடத்திலும் ரெயில் நிற்காது. ரெயிலின் மொத்த பயண நேரம் 5 மணி 50 நிமிடங்கள் ஆகும். புதன் கிழமையை தவிர்த்து வாரத்தின் 6 நாட்களும் இந்த ரெயில் இயக்கப்படும். 110 முதல் 130 வரையிலான கிலோ மீட்டர் வேகத்தில் இந்த ரெயில் இயக்கப்படும்.

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து கோவை இடையிலான ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரெயில் மதியம் 2.25 மணிக்கு சென்னை சென்டிரலில் இருந்து புறப்படும். இரவு 8.15 மணிக்கு கோவை சென்றடையும். கோவையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு அதேநாள் காலை 11.50 மணிக்கு சென்டிரல் ரெயில் நிலையம் வந்தடையும்.

சென்னையில் இருந்து நேற்று கோவைக்கு இயக்கப்பட்ட வந்தே பாரத் முதல் ரெயில் சேவையில் கோவை தெற்கு தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் பயணம் செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘இந்த ரெயில் சேவை எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது. கோவை சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. என்ற அடிப்படையில் பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ரெயில் சேவையின் மூலம் கோவை, ஈரோடு, திருப்பூர் பகுதிகள் இணைக்கப்படுகிறது. பொருளாதார வளர்ச்சி மேன்மை அடையும். வந்தே பாரத் ரெயில் பெரம்பூர் ஐ.சி.எப். ரெயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது என்பது தமிழராக எனக்கு பெருமையாக உள்ளது. வெளிநாடுகளில் உள்ள ரெயில் வசதி நமக்கும் கிடைத்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் இந்த ரெயில் சேவை வரும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்றார்.