ஐபிஎல்: பஞ்சாப்பை வென்று ராஜஸ்தான் அணி 7-வது வெற்றி

188

ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று நடந்த ஆட்டத்தில் பஞ்சாப்பை வெளியேற்றி ராஜஸ்தான் அணி 7-வது வெற்றியை பெற்றது.

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் இமாசலபிரதேசத்தில் உள்ள மலைவாசஸ்தலமான தர்மசாலாவில் நேற்றிரவு நடந்த 66-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்சை எதிர்கொண்டது.

‘டாஸ்’ ஜெயித்த ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரப்சிம்ரன் சிங், கேப்டன் ஷிகர் தவான் ஆகியோர் களம் இறங்கினர். முதல் ஓவரில் 2-வது பந்தில் பிரப்சிம்ரன் சிங் (2 ரன்) டிரென்ட் பவுல்ட் பந்து வீசில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். இந்த சீசனில் டிரென்ட் பவுல்ட் முதல் ஓவரில் வீழ்த்திய 7-வது விக்கெட் இதுவாகும். இந்த வகையில் அவருக்கு அடுத்த இடத்தில் பெங்களூரு வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் (5 விக்கெட்) இருக்கிறார்.

அடுத்து வந்து வேகமாக மட்டையை சுழற்றிய அதர்வா டெய்ட் (19 ரன்கள், 12 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) நவ்தீப் சைனி பந்து வீச்சில் தேவ்தத் படிக்கலிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். சற்று நேரம் தாக்குப்பிடித்த கேப்டன் ஷிகர் தவான் (17 ரன்கள், 12 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆடம் ஜம்பா சுழலில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டம் இழந்தார். பவர்பிளேயில் (முதல் 6 ஓவரில்) பஞ்சாப் அணி 48 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதையடுத்து கடந்த ஆட்டத்தில் அபாரமாக ஆடிய லிவிங்ஸ்டன் 9 ரன்னில் நவ்தீப் சைனி பந்து வீச்சில் போல்டு ஆகி ஏமாற்றம் அளித்தார். இதைத்தொடர்ந்து ஜிதேஷ் ஷர்மா, சாம் கர்ரனுடன் இணைந்தார். இருவரும் அடித்து ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். நவ்தீப் சைனி வீசிய ஒரு ஓவரில் 2 பவுண்டரி, சிக்சர் விளாசிய ஜிதேஷ் ஷர்மா (44 ரன்கள், 28 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) அதே ஓவரில் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து ஷாருக்கான், சாம் கர்ரனுடன் கைகோர்த்தார். கடைசி 2 ஓவரில் இருவரும் வெளுத்து வாங்கி வேகமாக 46 ரன்கள் சேர்த்தனர். 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது. சாம் கர்ரன் 49 ரன்னுடனும் (31 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), ஷாருக்கான் 41 ரன்னுடனும் (23 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டம் இழக்காமல் இருந்தனர். பேட்டிங்குக்கு அனுகூலமான இந்த ஆடுகளத்தை முன்வரிசை வீரர்கள் சரியாக பயன்படுத்தி கொள்ள தவறினாலும் கடைசி கட்ட வீர்கள் கச்சிதமாக பயன்படுத்தி அசத்தினர். ராஜஸ்தான் அணி தரப்பில் நவ்தீப் சைனி 3 விக்கெட்டும், டிரென்ட் பவுல்ட், ஆடம் ஜம்பா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் ரன் எதுவும் எடுக்காமல் ரபடா பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். ஜோஸ் பட்லர் தொடர்ச்சியாக 3-வது முறையாக (ஹாட்ரிக்) டக்-அவுட் ஆனார். அவர் இந்த சீசனில் அதிகபட்சமாக 5 முறை டக்-அவுட் ஆகியிருக்கிறார். இதைத்தொடர்ந்து தேவ்தத் படிக்கல், தொடக்க வீரர் ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிலைத்து நின்று அணியை சரிவில் இருந்து மீட்டனர். 29 பந்துகளில் அரைசதத்தை எட்டிய தேவ்தத் படிக்கல் (51 ரன்கள், 30 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) அர்ஷ்தீப் சிங் பந்து வீச்சில் ஹர்பிரீத் பிராரிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். அப்போது அணியின் ஸ்கோர் 85 ரன்னாக இருந்தது. அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 2 ரன்னில் ராகுல் சாஹர் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து மீண்டும் ஏமாற்றம் அளித்தார். இதனையடுத்து ஹெட்மயர், ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்தார். நிலைத்து நின்று நேர்த்தியாக ஆடிய ஜெய்ஸ்வால் 35 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இந்த சீசனில் அவர் அடித்த 4-வது அரைசதம் இதுவாகும். அதே ஓவரில் ஜெய்ஸ்வால் (50 ரன், 36 பந்து, 8 பவுண்டரி) நாதன் எலிஸ் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த ரையான் பராக் 20 ரன்னில் (12 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) ரபடா பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். சிறப்பாக ஆடிய ஹெட்மயர் 46 ரன்னில் (28 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) சாம் கர்ரன் பந்து வீச்சில் கேப்டன் ஷிகர் தவானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். தாழ்வாக வந்த பந்தை தவான் தாவிய நிலையில் அருமையாக பிடித்தார்.

கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 9 ரன்கள் தேவையாக இருந்தது. அந்த ஓவரை சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாஹர் வீசினார். அவர் முதல் 3 பந்துகளில் 4 ரன் விட்டுக்கொடுத்தார். 4-வது பந்தை துருவ் ஜூரெல் சிக்சருக்கு தூக்கி தித்திப்பாக முடித்தார். 19.4 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட்டுக்கு 189 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. துருவ் ஜூரெல் 10 ரன்னுடனும், டிரென்ட் பவுல்ட் ஒரு ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். பஞ்சாப் தரப்பில் ரபடா 2 விக்கெட்டும், சாம் கர்ரன், அர்ஷ்தீப் சிங், நாதன் எலிஸ், ராகுல் சாஹர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

14-வது ஆட்டத்தில் ஆடிய ராஜஸ்தான் அணி முந்தைய ஆட்டத்தில் பஞ்சாப்பிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்ததுடன் 7-வது வெற்றி பெற்று அடுத்த சுற்று வாய்ப்பில் நூலிழையில் நீடிக்கிறது. 8-வது தோல்வியை சந்தித்த பஞ்சாப் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு முடிவுக்கு வந்தது.