பிளாக்கில் ஐபிஎல் கிரிக்கெட் டிக்கெட் விற்பனை: 24 பேர் கைது

176

சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் டிக்கெட்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததாக 24 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை, சேப்பாக்கம், எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினருக்கிடையேன ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நேற்று இரவு நடைபெற்றது. அந்த கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகள் கள்ள சந்தையில் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், திருவல்லிக்கேணி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை காவல் குழுவினர் சேப்பாக்கம், கிரிக்கெட் மைதானம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளான பட்டாபிராம் கேட், வாலாஜா சாலை, பெல்ஸ் ரோடு, வாலஜா ரோடு சந்திப்பு, வாலாஜா ரோடு, விக்டோரியா ஹாஸ்டல் சாலை சந்திப்பு, சேப்பாக்கம் இரயில்வே ஸ்டேசன், பெல்ஸ் ரோடு, அஞ்சப்பர் உணவகம் ஆகிய இடங்களில் தீவிரமாக கண்காணித்து, அங்கு கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை சட்ட விரோதமாக கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்தது தொடர்பாக 15 வழக்குகள் பதிவு செய்து 24 நபர்களை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து கள்ள சந்தையில் விற்பனை செய்ய வைத்திருந்த 62 டிக்கெட்டுகள் மற்றும்ரூ.65,700 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.