பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் ஊராட்சிமன்ற தலைவர் பி.பி.ஜி. சங்கர் (வயது 42). இவர் பா.ஜ.க. எஸ்.சி.-எஸ்.டி. பிரிவு மாநில பொருளாளராக இருந்து வந்தார். இவர் நேற்று இரவு தனது காரில் டிரைவருடன் சென்னையில் இருந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். பூந்தமல்லி நெடுஞ்சாலை, நசரத்பேட்டை சிக்னல் அருகே வந்த போது திடீரென மர்ம கும்பல் வழிமறித்து காரின் மீது நாட்டு வெடிகுண்டை வீசியது. இதனால் நிலைகுலைந்த கார் டிரைவர் வண்டியை நிறுத்தினார். காரில் இருந்து இறங்கி பிபிஜி சங்கர் சாலையில் ஓடினார். அந்த மர்ம கும்பல் அவரை விடாமல் விரட்டி சென்று ஓட, ஓட வெட்டி சரமாரியாக வெட்டிச் சாய்த்தனர். இதில் சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் சங்கர் துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த நசரத்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவரது உடலை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.