மேலப்பாளையம் ரிபாஈ ஆண்டவர்கள் தர்கா ஷரீப் தலைமை பீடத்தில் பெரிய ராத்திபு திக்ர் மஜ்லிஸ் கந்தூரி விழா
நெல்லை, மேலப்பாளையம் சுல்த்தான் செய்யது அஹ்மது கபீர் ரிபாஈ ஆண்டவர்கள் தர்கா ஷரீப்பில் வருடாந்திர கந்தூரி விழா வெகு விமரிசையாக நடந்தது.
நெல்லை மேலப்பாளையம், வெள்ளை கலீபா தெரு, ரிபாஈ ஆண்டவர்கள் தர்கா ஷரீப்பில் நபிகள் நாயகத்தின் திருப்பேரர் சுல்த்தானுல் ஆரிபீன் அஸ்சுல்த்தான் செய்யது அஹ்மத் கபீர் ரிபாஈ ஆண்டவர்கள் (ரழி) வருடாந்திர பெரிய ராத்திபு திக்ர் மஜ்லிஸ் கந்தூரி விழா தாயிரா டங்கா, தப்ஸ் முழக்கங்களுடன் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கடந்த 24.11.2024 அன்று இரவு 9.30 மணிக்கு தொடங்கி அதிகாலை 4 மணி வரை நடந்த இந்த ஆன்மிக நிகழ்வில் அல்லாஹ்வைப் புகழும் திக்ர், ஹதீஸ், ரிபாஈ ஆண்டவர்களின் சரிதைகள், தரீக்காவின் மகத்துவங்கள், ரிபாஈ நாயகத்தின் மீது அன்பு வைக்கும் உறுதி மொழிகள், மெஞ்ஞான ரகசிய போதனைகள், சொற்பொழிவுகள் மற்றும் ரிபாஈ பக்கீர்களின் காதிரிய்யா நிகழ்ச்சியும் நடைபெற்றது. முன்னதாக வெள்ளை கலீபா முஹம்மது கவ்து வலியுல்லாஹ்வின் அடக்கதலத்தில் சந்தனம் பூசப்பட்டது.
மேலப்பாளையம் ரிபாஈ தரீக்காவின் தலைவர் ஹாஜி வெள்ளை கலீபா அமீர் ஹம்ஸா சாஹிப் செய்யிது கவ்துல்லாஷா ரிபாஈ தலைமையில் நடந்த இந்த கந்தூரி நிகழ்ச்சியில் மேலப்பாளையம் சர் கலீபா செய்யது ஹிதாயத்துல்லாஷா ரிபாஈ அஹ்மதியத்துல் காதிரி மற்றும் கலீபாக்கள் தாவூதலி குலாம் அஹ்மது செய்யது நூருல்லாஷா ரிபாஈ அஹ்மதியத்துல் காதிரி, முஹம்மது யூனுஸ் ஷாதுலி செய்யது அன்வாருல்லாஷா ரிபாஈ அஹ்மதியத்துல் காதிரி மற்றும் புகராக்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இறுதியில் ஸலாம் பைத் ஓதி நேர்ச்சை வழங்கி நிகழ்ச்சி முடிவுற்றது.