ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி வெற்றி

144

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1- 2 என்ற கணக்கில் தோற்றது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று பகல் -இரவு ஆட்டமாக நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய பொறுப்பு கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் ஆஸ்திரேலியாவை பேட்டிங் செய்ய பணித்தார்.

இதையடுத்து மிட்செல் மார்சும், டிராவிஸ் ஹெட்டும் ஆஸ்திரேலியாவின் இன்னிங்சை தொடங்கினர். ஓரளவு புற்கள் காணப்பட்ட இந்த ஆடுகளத்தில் பந்து பவுன்ஸ் ஆனதுடன், வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைத்தது. டிராவிஸ் ஹெட் (5 ரன்) முகமது சிராஜின் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார். அடுத்து கேப்டன் ஸ்டீவன் சுமித் வந்தார். மறுமுனையில் மிட்செல் மார்ஷ் இந்திய பந்து வீச்சை துவம்சம் செய்தார். சிக்சரும், பவுண்டரியுமாக தெறிக்க விட்டார். ஸ்கோர் 77 ஆக உயர்ந்த போது சுமித் 22 ரன்களில் (30 பந்து, 4 பவுண்டரி) கேட்ச் ஆனார். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா 19 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 124 ரன்களை எடுத்திருந்ததை பார்த்த போது, ஸ்கோர் எளிதில் 300-ஐ தாண்டும் போலவே தோன்றியது.

இந்த சூழலில் மிட்செல் மார்சை (81 ரன், 65 பந்து, 10 பவுண்டரி, 5 சிக்சர்) சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா காலி செய்தார். இது தான் ஆட்டத்தின் திருப்புமுனையாகும். அதன் பிறகு இந்திய பவுலர்களின் பிடியில் சிக்கிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினார்கள். ஆஸ்திரேலியா 35.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 188 ரன் மட்டுமே எடுத்தது. இதில் கடைசி 19 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது கவனிக்கத்தக்கது. இந்திய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, முகமது சிராஜ் தலா 3 விக்கெட்டும், சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன் மூலமாக இந்தியாவுக்கு எதிராக 2ஆவது முறையாக குறைந்தபட்ச ரன் எடுத்தது ஆஸ்திரேலியா. கடந்த 2008 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக நடந்த 4 ஆவது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா 159 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது. அந்த ஆட்டத்திலும் இந்தியா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆடிய இந்தியாவும், ஆஸ்திரேலியாவின் ‘ஸ்விங்’ தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திண்டாடியது. குறிப்பாக இடக்கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மணிக்கு 144 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி நிலைகுலைய வைத்தார். இஷான் கிஷன் (3 ரன்), விராட் கோலி (4 ரன்), சூர்யகுமார் யாதவ் (0) வரிசையாக எல்.பி.டபிள்யூ. ஆனார்கள். சுப்மன் கில் (20 ரன்) அடித்த பந்தை லபுஸ்சேன் சூப்பராக கேட்ச் செய்தார். அப்போது இந்தியா 39 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை (10.2 ஓவர்) இழந்து பரிதவித்தது.

நெருக்கடிக்கு மத்தியில் 5-வது விக்கெட்டுக்கு விக்கெட் கீப்பர் லோகேஷ் ராகுலும், கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவும் கைகோர்த்து அணியை சிக்கலில் இருந்து மிதமாக மீட்டனர். நன்றாக ஆடிக்கொண்டிருந்த ஹர்திக் பாண்ட்யா (25 ரன், 31 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஸ்டோனிஸ் வீசிய ஷாட்பிட்ச் பந்துக்கு அவுட்டானார்..

இதைத் தொடர்ந்து ராகுலும், ரவீந்திர ஜடேஜாவும் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினர். மிட்செல் ஸ்டார்க் வீசிய ஒரு பந்து ராகுலின் வயிற்றை பதம்பார்த்தது. அந்த வலியையும் தாங்கிக் கொண்டு பக்குவமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அவரது மனஉறுதிமிக்க போராட்டம் இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றது. இறுதியில் ஜடேஜா பவுண்டரியோடு இன்னிங்சை முடித்து வைத்தார்.

இந்திய அணி 39.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 191 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆல்-ரவுண்டராக ஜொலித்த ஜடேஜா ஆட்டநாயகன் விருதை பெற்றார். வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறுகையில், ‘இரு இன்னிங்சிலும் நாங்கள் நெருக்கடிக்கு மத்தியிலேயே விளையாடினோம். தொடர்ந்து நிதானமாக செயல்பட்டு இது போன்று சிக்கலான சூழலில் இருந்து மீண்டு வரும் வழிமுறையை கண்டுபிடித்தோம். லோகேஷ் ராகுலுடன் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் தேவைப்பட்டது. அதை ஜடேஜா சிறப்பாக செய்து முடித்தார். ராகுலும், ஜடேஜாவும் ஆடிய விதம் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை தந்தது. அவர்களை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்’ என்றார்.

ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் கூறுகையில், ‘மும்பை ஆடுகளம் இது போன்று இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. வழக்கமாக இது அதிக ரன்கள் குவிக்க கூடிய இடம். இந்தியாவின் பந்து வீச்சு உண்மையாக அபாரமாக இருந்தது. ஆடுகளத்தில் பந்து நன்கு ஸ்விங் ஆன நிலையில் நாங்கள் 250 ரன்கள் எடுத்திருந்தால் ஆட்டம் சுவாரஸ்யமாக இருந்திருக்கும். மிட்செல் மார்சுக்கு பிறகு எங்களுக்கு வலுவான பார்ட்னர்ஷிப் கிடைக்காததால், சவாலான ஸ்கோரை எடுக்க இயலாமல் போய் விட்டது’ என்றார். வெற்றியின் மூலம் தொடரில் இந்தியா 1- 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது ஒரு நாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை நடக்கிறது.