சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் கும்பலைச் சேர்ந்த 3 நபர்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து போலி பாஸ்போர்ட்டுகள், ஆவணங்கள் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

19.05.2023ம் தேதி அன்று உதவி இயக்குநர், வருவாய் புலனாய்வு இயக்குநரகம் சென்னை மண்டல பிரிவு, சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு, சீட்டு, கந்துவட்டி மற்றும் போலி கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பிரிவில் கொடுத்த புகாரில் முகமது ஷேக் இலியாஸ் என்பவர் கடவுச்சீட்டு மற்றும் விசா போன்ற ஆவணங்களை போலியாக தயாரித்திருப்பதாகவும் அதற்கு தேவையான உபகரணங்களை வைத்திருப்பதாகவும் தெரிவித்திருந்ததின் பேரில் மத்திய குற்றப்பிரிவு, சீட்டு, கந்துவட்டி மற்றும் போலி கடவுச்சீட்டு பிரிவில் வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்து, மேற்படி மோசடியில் ஈடுபட்ட எதிரி ராயபுரத்தை சேர்ந்த முகமது ஷேக் இலியாஸ், வ/54, த/பெ.முகமது என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு 20.05.2023ம் தேதி நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.

இவ்வழக்கில் மத்திய குற்றப்பிரிவு காவல் குழுவினர், போலி பாஸ்போர்ட் மற்றும் போலி விசா தயார் செய்யும் ஏஜெண்டுகளை பற்றி தொடர் விசாரணை மேற்கொண்டு இவ்வழக்கில் தொடர்புடைய திருவொற்றியூரைச் சேர்ந்த சிவகுமார், 43, மற்றும் ராயபுரத்தை சேர்ந்த முகமது புகாரி, 42, ஆகியோரை நேற்று (29.05.2023) கைது செய்து தீவிர விசாரணை மேற்க்கொண்டு எதிரி முகமது புகாரியிடமிருந்து பாஸ்போர்ட்டுகள், பாஸ்போர்ட் தாள்கள், இந்திய அரசு மற்றும் வெளிநாடுகளின் போலியான ரப்பர் ஸ்டாம்புகள், அதை தயாரிக்கும் உபகரணங்கள், Computer, UV Light, stamping Machine. 2 செல்போன்கள் என மொத்தம் 160க்கும் மேற்பட்ட வழக்கு சொத்துகள் கைப்பற்றினர்.

பாஸ்போர்ட் வாங்கி தரும் ஏஜெண்டுகளிடம் பழைய பாஸ்போர்ட்கள் மற்றும் விசா பேப்பர்களை வாங்கி அதன் உள்பக்க தாள்களை பிரித்து எடுத்து தகுதியில்லாத இந்திய மற்றும் வெளிநாட்டு நபர்களுக்கு போலியாக பாஸ்போர்ட்கள் மற்றும் விசா ஸ்டாம்பிங் செய்து தந்து பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டு வந்ததாக எதிரிகள் விசாரணையின்போது தெரிவித்தனர்.
ஏஜெண்டுகள் மூலமாக பாஸ்போர்ட் மற்றும் விசா பெற விண்ணப்பிக்கும் பொதுமக்கள் இது தொடர்பாக உஷாராக இருக்குமாறும் மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் மூலமாக முறையான ஆவணங்களை சமர்பித்து பாஸ்போர்ட் மற்றும் சம்பந்தபட்ட நாடுகளின் தூதரகங்களை அணுகி விசாக்களை பெறுமாறும் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இவ்வழக்கில் போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் கும்பலை கைது செய்து உபகரணங்களை கைப்பற்றிய மத்திய குற்றப்பிரிவு சீட்டு மற்றும் கந்துவட்டி, போலி கடவுச்சீட்டு பிரிவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் வெகுவாக பாராட்டினார்.