சென்னை, ராயப்பேட்டை ஸ்ரீ வெங்கடேஷ்வரர் மெட்ரிக்குலேசன் பள்ளியின் தாளாளரை தமிழக கல்வித்துறை செயலர் பாராட்டினார்.

பள்ளிக் கல்வித் துறையால் நடத்தப்படும் பள்ளி மாணவ மாணவியருக்கான மண்டல அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகளை தென் சென்னை மாவட்டம் இராயப்பேட்டை பகுதியிலுள்ள 47 பள்ளிகளைச் சார்ந்த மாணவர்களுக்கு நடத்தும் பொறுப்பு, இராயப்பேட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரர் மெட்ரிக்குலே‘ன் மேல்நிலைப் பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலரால் நியமிக்கப்பட்டபடி அப்பள்ளியின் தாளாளர் மற்றும் மண்டல செயலர் வேதா சீனிவாசன் உற்சாகத்தோடு மனமுவந்து குழு விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வந்துள்ளார்.
ஒரு மாத காலமாக நடைபெற்று வரும் இப்போட்டிகளின் இறுதி கட்ட நிகழ்வுகள் ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் 12.09.2023 அன்று நடைபெற்றன. விழாவின் தலைமை விருந்தினரான தென்சென்னை மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) சரஸ்வதி தேசியக் கொடி, ஒலிம்பிக் கொடி, மற்றும் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார். மற்றொரு விருந்தினரான சர்வதேச கைப்பந்து வீரரும் ஓய்வு பெற்ற வருமான வரித்துறை இணை ஆணையருமான ஹரிகிருஷ்ணன் உடனிருந்தார். மாணவ,மாணவியரின் அணிவகுப்பு மரியாதையை விருந்தினரும், பள்ளி தாளாளரும் ஏற்றுக் கொண்டனர்.
விழாவில் மாவட்டக் கல்வி அலுவலர் சரஸ்வதி பேசுகையில், ‘‘மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் பெருமளவு ஈடுபட்டுத் தம் திறமையை வெளிக் கொணர்வதன் மூலம் ஒழுக்கம், கட்டுப்பாடு, குழுவாக ஒற்றுமையுடன் செயலைச் செய்து முடிக்கும் திறன், போன்ற நற்குணங்கள் விளங்கப் பெறுவர் நற்குணங்கள் விளங்கப் பெறுவார்கள். விளையாட்டுப் போட்டிகளை சீரிய முறையில் நடத்தி வரும் மண்டல குழுத் தலைவர் வேதா சீனிவாசனுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்’’ என்றார். மேலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கி பாராட்டிய சரஸ்வதி, ராயப்பேட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரர் மெட்ரிக் மேல்நிலைப் மாணவியரின் தேசிய ஒற்றுமைக்கான நடனத்தைக் கண்டு களித்தார்.
பள்ளியில் நடந்த பிற்பகல் நிகழ்ச்சியில் தென்சென்னை தனியார் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் சத்தியபாமா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செங்கதிர் ஆகியோரும் விழாவைத் தலைமையேற்று நடத்திக் கொடுத்தனர். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி மகிழ்வித்தனர். பின்பு நாட்டுப்பண்ணுடன் விழா முடிவடைந்தது.