ரூ. 5 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் தீயிலிட்டு அழிப்பு: தமிழக அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் நடவடிக்கை
தமிழகம் முழுவதும் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு காவல்துறையினரால் மீட்கப்பட்ட ரூ. 5 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் இன்று தீயிலிட்டு எரித்து அழிக்கப்பட்டன.
போதையில்லா தமிழகம் என்ற தமிழக முதல்வர் ஸ்டாலினின் திட்டத்தின் படி தமிழக அமலாக்கம் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவு காவல்துறையினர் அதிரடி ரெய்டுகள் நடத்தி போதைக்கடத்தல் ஒழிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அமலாக்கப் பணியக கூடுதல் டிஜிபி அமல்ராஜ் உத்தரவின் பேரில், ஐஜி செந்தில்குமாரி தலைமையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக மாநிலம் முழுவதும் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாரால் 428 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் இன்று நீதிமன்றம் உத்தரவின் பேரில் செங்கல்பட்டு தென்மேல் பாக்கத்தில் உள்ள எரியூட்டு நிலையத்தில் தீயில் போடப்பட்டு அழிக்கப்பட்டன. மொத்தம் 4,727.971 கிலோ கஞ்சா, 0.72 கி.கி ஹெராயின் மற்றும் 1.5 கி.கி ஹாசிஸ் உள்ளிட்ட மொத்தம் ரூ. 5 கோடி மதிப்பிலான போதை பொருள் ஒழிப்பு குழுமத்தின் மேற்பார்வையில் தீயிலிட்டு அழிக்கப்பட்டது. அமலாக்கம், குற்றப்புலனாய்வுப் பிரிவு ஐஜி செந்தில்குமாரி தலைமையில் மற்றும் தடய அறிவியல் துறை துணை இயக்குனர் ஆகியோர் அடங்கிய குழுவினரால் கஞ்சாவை தீயிலிட்டு அழித்தனர்.
இந்த ஆண்டு இதுவரை, 1,742 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் 26,329.727 கிலோ உலர் கஞ்சா, 77.67 கிலோ ஹாஷிஷ் ஆயில், 103.85 கிலோ சாரஸ், 1.862 கிலோ ஹெராயின், 245.6 கிலோ கஞ்சா சாக்லேட், 1.61 கிலோ மெத்தாம்பிட்டமைன் உள்ளிட்ட 27 கோடி மதிப்பிலான போதைப்பொருள்களை போதை பொருள் நுண்ணறிவு பிரிவினரால் எரிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள், போதைப்பொருள் மற்றும் மனமயக்க பொருட்களின் சட்டவிரோத விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான எந்தவொரு தகவலையும் 10581 என்ற கட்டணமில்லா உதவி எண்ணிலும், 9498410581 என்ற வாட்ஸ்அப் மூலமாகவும் அல்லது spnibcid@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.