ரூ. 15.5 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் எரித்து அழிப்பு: அமலாக்கம் குற்றப்புலனாய்வுப்பிரிவு காவல்துறை நடவடிக்கை
ரூ. 15.5 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் தீயிழிட்டு அழித்து தமிழக அமலாக்கம், குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் போதைப்பொருட்களை அடியோடு ஒழிக்கும் நோக்கில் முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் அமலாக்கம் குற்றப்புலனாய்வுப்பிரிவு காவல் துறையினர் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். கூடுதல் டிஜிபி அமல்ராஜ் மேற்பார்வையில், ஐஜி செந்தில்குமாரி தலைமையில் போதைப் பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக கடந்த 12.08.2025 மற்றும் 13.08.2025 ஆகிய தேதிகளில், தமிழ்நாடு போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவினரால் 959 வழக்குகளில் சுமார் 14,591.74 கிலோ உலர் கஞ்சா, 45.85 கிலோ சாரஸ் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 4.6 கிலோ கஞ்சா சாக்லேட், 0.75 கிலோ மெத்தம்பெட்டமைன், 2.02 கிலோ ஹாஷிஷ் ஆயில் மற்றும் 0.142 கிலோ ஹெரோயின் உள்ளிட்ட மொத்தம் ரூ. 15.5 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை சட்ட முறைகளை பின்பற்றி, செங்கல்பட்டு மாவட்டம் தென்மேல்பாக்கத்தில் உள்ளஅங்கீகரிக்கப்பட்ட எரிக்கும் ஆலையில் எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டது. ஐஜி செந்தில்குமாரி தலைமையில் போதைப்பொருட்கள் தீயிலிட்டு இன்று எரிக்கப்பட்டன.

நடப்பு ஆண்டில் (2025) இதுவரை, 1,314 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 21,731.127 கிலோ உலர் கஞ்சா, 76.17 கிலோ ஹாஷிஷ் ஆயில், 103.85 கிலோ சாரஸ், 1.142 கிலோ ஹெராயின், 245.6 கிலோ கஞ்சா சாக்லேட், 1.61 கிலோ மெத்தாம்பிட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருள்களை போதை பொருள் நுண்ணறிவு பிரிவினரால் எரித்து அழிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற போதைப் பொருட்களை பாதுகாப்பாக அழிக்கும் பணிகளில் ஈடுபட்ட போதை பொருள் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் துணை இயக்குநுர், தடயவியல் துறை ஆகியோரை அமலாக்கம் குற்றப்புலனாய்வுப் பிரிவு கூடுதல் டிஜிபி அமல்ராஜ் வெகுவாக பாராட்டினார்.